பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

கொள்கை முதலிய கோட்பாடுகள் சங்க இலக்கியப் பாடல்களில் பொங்கிப் பொலிவதைத் தொடர்ந்து ஆங்காங்கே சுட்டிக்காட்டுகின்றார். அடிகளார், சங்கப்புலமையோடு, சைவசித்தாந்த நுணுக்கத்தையும் தெளிவாக அறிந்தவர்கள். ஐயத்தின் நீங்கித் தெளிந்த அளப்பருஞ்சீர்த்தியால், சிலப்பதிகாரத்தின் ஊழ்வலிமைபற்றி அடிகளார் வரைந்து காட்டும் திறம், உலகத்தில் யாதொரு பொருள், யாதோர் இயல்பாய்த் தோன்றினும், தோன்றிய அவ்வெளித் தோற்றத்தைக் கண்ட அளவில் அமைந்துவிடாது. அப்பொருளின் உள்நின்று இயக்கும் மெய்ப்பொருளைக் கண்டுணர்வதே உண்மைப் புலமையாகும் என்று சான்றோர் உரைக்கும் விளக்கத்தை வரையறையாகக் கொண்டு ‘சிலம்புநெறி’ என்னும் கட்டுரையை அடிகளார் உலகியலோடு ஆராய்ந்து ஊழ் வலிமையை விளக்குகிறார்.

“ஊழ், மற்றவரின் படைப்பும் அல்ல; கடவுளின் கொடையும் அல்ல; உலகியலின் ஒழுங்கமைதிகளுள் ஊழமைவும் ஒன்று.”

“உலகியலில் இயற்கையில் வலிமையாக இருந்த புயல், பெருமழை, வெள்ளம் முதலியவற்றை மனிதன் இன்று வெற்றிபெற்று, ஆண்டு அனுபவிக்கிறான்.”

“இயற்கையோடு அவன் நிகழ்த்தும், நிகழ்த்திக் கொண்டிருக்கும் போராட்டத்தில் மனிதகுலம் வெற்றிகளையே பெற்று வருகிறது. ஒரோவழி, பெறும் தோல்விகள் கூட வெற்றியின் வாயில்களாக அமைந்தனவேயன்றி, முற்றான தோல்விகளல்ல.”

“அதுபோல ஊழியலின் ஒழுங்கமைவையும், மனிதன் வெற்றிகாண முடியும் என்பது ஒரு கொள்கை.”

“ஊழியலின் ஒழுங்கமைவை வெற்றிபெறுதல் என்றால், ஒழுங்கமைவை எதிர்த்துப் போராடுவது அல்ல. ஊழின் ஒழுங்கமைவை எதிர்த்துப் போராடுவது என்றால், நியதிகளை எதிர்த்தல்ல.”

“நியதிகளும் ஒழுங்கமைவுகளும் இல்லாது போனால், வாழ்க்கையில் ஓரமைவு இருக்காது; அமைதி இருக்காது: நல்லன நோக்கி நல்ல நினைந்து செயற்படுதல் இல்லாமல் போகும்."