பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

177


கணவன் கள்வன் அல்லன் என்று பாண்டியன் உணரும்படி செய்கிறாள்.

தன் கணவன் கோவலன் மீது கள்வன் என்று பழி சுமத்திய பாண்டிய பேரரசன் வாய் மொழியினாலேயே கோவலன் கள்வன் அல்லன் என்ற முடிவைப் பெற்று உலகத்திற்குத் தந்து கோவலனுடைய புகழைக் காப்பாற்றினாள். இன்றும் காப்பாற்றுகிறாள்.

அன்று கண்ணகி பாண்டிய அரசோடு போராடிக் கோவலன் புகழைக் காப்பாற்றத் தவறியிருந்தாளானால் இன்று கோவலன் நினைப்பதற்குக்கூட தகுதியுடையவனாக இருந்திருக்க மாட்டான்.

வரலாற்று ஏடுகளும் காப்பியங்களும் பழிசுமத்த கோவலனையே காட்டும். கோவலன் வழி வணிகர் குலமும் சோழ நாடும் கூட பழி சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். கண்ணகி, இவ்வகையில் செய்த பணிக்கு ஈடாக உலகத்தில் வேறெதுவுமில்லை.

மதுரையை எரிக்கலாமா?

கண்ணகி, பாண்டியன் அரசவைக் களத்தில் முறையாக வழக்குரைத்து வெற்றி பெறுகிறாள். நீதியினை நிலைநாட்டுகிறாள். கோவலன் புகழைக் காப்பாற்றுகிறாள்; ஆயினும் கண்ணகியின் ஆற்றாமை நீங்கவில்லை; துயர் தணியவில்லை. கண்ணகியின் வெகுளி பொங்கியெழுந்து செயற்படுகிறது. ஆயினும் நெறிமுறை கடந்துவிடவில்லை. கண்ணகி, மதுரையை அழிப்பேன் என்று உறுதி பூணுகிறாள். மதுரையை அழிப்பானேன்?

கோவலன் கள்வனல்லன் என்பது உறுதியாகிவிட்டது. கோவலன் உயிரை முறை கேடாக எடுத்துக்கொண்ட பாண்டிய அரசன் உயிரைக் கொண்டாகிவிட்டது. கணவனை இழந்த கண்ணகி பட்ட துயரைப்