பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

199


பிரிவு பகையாக மாறி வளராமல் தவிர்க்கப்படும். காலப் போக்கில் உறவும் தோன்றும்; வளரும்.

மாதவியிடத்தில் இந்தப் போக்கு கால்கொண்டு விட்டது. இரண்டாவது திருமுகத்தில் காதலி, காதலனுக்கு எழுதுவது போன்ற சொற்றொடர்களே அமையவில்லை. ஒரு ஞானாசிரியர்க்கு ஒரு மாணாக்கன் எழுதுவது போல, கோவலனுக்கு மாதவி எழுதிய திருமுகம் அமைந்திருந்தது.

மாதவி, கோவலனுக்கு எழுதிய திருமுகத்தை அப்படியே தன் பெற்றோருக்குக் காட்டுமாறு பணித்தான். காதலனைப் பிரிந்து பிரிவுத் துன்பத்தால் வருந்தும் ஒரு காதலி, தன் காதலனுக்கு எழுதிய திருமுகம் மற்றவர்களும் அதிலும் சிறப்பாக பெற்றோர்களும் படிக்கத்தக்கதாக அமைந்ததெனில் மாதவி எவ்வளவு செழிப்பாக வளர்ந்திருக்கிறாள் என்பதை அறியமுடிகிறது.

மாதவியின் திருமுகம் இதோ:

“அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக் கொளல் வேண்டும்
குரவர்பணி யன்றியும் குலப்பிறப் பாட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி”

(புறஞ்சேரியிறுத்த காதை 87-92)

கோவலனை ‘அடிகள்’ என்று விளித்து எழுதுகிறாள்; தன்னை அடியவளாக்கிக் கொண்டு வணக்கத்தைப் புலப்படுத்துகிறாள். மாதவி தன் இரண்டாவது திருமுகத்தை தேர்ந்து தெளிந்து எழுதுகிறாள்.

அதுமட்டுமன்று, கோவலனின் மன நிலையைப் போற்றிப் பாதுகாக்குமாறும் ஆற்றுப்படுத்துகிறாள். ஆயினும்