பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





13


சிலம்புவழிச் சிந்தனை


தமிழ்த்தாய் பெற்றுள்ள மிகச் சிறந்த காப்பியங்களுள் சிலப்பதிகாரமும் ஒன்று. சிலப்பதிகாரம் செஞ்சொற் காப்பியம். பாரதி கூறியதுபோல, நெஞ்சையள்ளும் காப்பியம்! தமிழ்ச் சுவையாலும், கருத்துச் செறிவாலும், உணர்ச்சியூட்டும் வகையாலும் சிறந்து விளங்குகிறது. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் தமிழ் மரபினர்-தண்ணருள் மிக்கவர்-முதற்பெரும் கவிஞர். அவர் தமிழினத்திற்கென்று திட்டமிட்டுச் செய்த காப்பியம் சிலப்பதிகாரம். இளங்கோவடிகள் காலத்தில், தமிழக அரசு மூன்று பேரரசுகளாகப் பிரிந்தும் பிணங்கியும் இருந்ததைக் கண்டார். சேர சோழ பாண்டிய நாடெனத் திகழ்ந்த இம்மூன்று நாடுகளையும் ஒருங்கிணைக்க விரும்பினார். நிலப்பரப்பால் ஒருங்கிணைக்கும் முயற்சியைவிட, கருத்துவழி இணைப்பு உரிய பயனைத் தரும் என்று நம்பினார். ஆதலால் மூன்று நாடுகளையும் இணைத்த காப்பியத்தைச் செய்ய அவர் முன்வந்தார். அக்காப்பியத்தின் வழி மக்கள் மன்றத்தில் பிரிவினைகளைக் கடந்த ஒருமைப்பாட்டுணர்வைத் தோற்றுவித்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டார். ஆதலால், சோழ நாட்டுக் குடிமகளாகிய கண்ணகியைப்