பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று சூளுரைக்கிறான். உடன் அவைக்களத்திலிருந்த புரோகிதன் செங்குட்டுவனை நோக்கி, “வடபுலத்து மன்னர்கள் நின்கொற்றத்தைப் பழித்திலர் மற்ற பாண்டிய சோழ அரசர்களையே” என்று கூறுகின்றான்.

“ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும்
சீர்கெழு மணிமுடிக்கு அணிந்தோ ரல்லால்
அஞ்சினர்க்கு அளிக்கும் சுடுபோர் அண்ணல்! நின்
வஞ்சினத் தெதிரும் மன்னரும் உளரோ?
இமைய வரம்ப நின் இகழ்ந்தோர் ரல்லர்
அமைய நின் சினமென ஆசான் கூற.”

(வஞ்சிக் கால்கோள் 19-24)

எனும் அடிகளைக் காண்க. செங்குட்டுவன் இந்த நிலையில் நல்ல தமிழனாக தமிழின மானம் காக்கும் தலைமகனாக விளங்குகின்றான். ஆதலால், மற்றவர் இகழ் கேட்கப் பொறுத்தானில்லை. நாங்கள் எல்லோரும் தமிழர்கள் தமிழர்க்கு வந்த பழி எனக்கும் வந்த பழியேயாம் என்று நினைக்கின்றான். தமிழருள் ஒருவனாக மூவேந்தருள் ஒருவனாக விளங்கிய செங்குட்டுவன் வடபுலம் நோக்கிப் படை நடத்துகிறான். தமிழினத்தின் மானம் காக்க! வடபுலத்து மன்னர்களான கனக விசயர்களை வெற்றி கொள்கின்றான். அவர் தம் தலையில் இமயத்தின் கல்லை ஏற்றி அக்கல் கங்கையில் நீராட்டப் பெற்றுத் தமிழகத்திற்குக் கொண்டு வரப்படுகிறது கண்ணகிக்குச் சிலை எடுக்க! வடபுலத்து மன்னர்கள் கனக விசயர் தலையில் சுமந்து வந்த கல் வந்து சேர்ந்துவிட்டது. பின் செங்குட்டுவன் தமிழர் பெற்ற வெற்றியை மற்ற சோழ பாண்டிய அரசர்களும் கண்டு, கேட்டு மகிழட்டும் என்று எண்ணி போர்க் கைதிகளை அவர்களுக்குக் காட்டிவர அனுப்பினான். ஆனால் அவர்கள் சோழ பாண்டிய அரசர்கள் அதை வேறு வகையாக எடுத்துக் கொண்டு விட்டார்கள். அதாவது, சேர