பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்பது புறநானூறு. ஆனால், கம்பன் குடிமக்களை உயிராகவும் அயோத்தியில் இருந்த பேரரசன் தசரதனை - மன்னனை - உடம்பாகவும் கூறுவதை அறிந்து அனுபவிக்க வேண்டும். உயிர்தான் முக்கியமானது. உயிருக்குக் கருவிதான் உடம்பு. உயிர் எலாம் உறைவதோர் உடம்புமாயினான் என்றான் கம்பன். அதாவது, மக்களுக்காகவே அரசு, மன்னன் எல்லாம். இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் அரசனைக் கடவுளாகவும் அரசனது ஆணையைக் கடவுளின் ஆணையாகவும் போற்றப்பட்டிருப்பதை நோக்கும்பொழுது, கம்பன் கண்ட அரசு, மக்கள் அரசாக விளங்குவதைக் காண மகிழ்வு மேலிடுகிறது. ஆனால், இன்றோ மக்கள் சட்ட ரீதியாக உரிமை பெற்றிருந்தாலும், அரசின் நடைமுறையில் குடிமக்களாகக் கூட நடத்தப்படவில்லை. அரசின் உடைமையாக - வாக்களிக்கும் எந்திரங்களாக மதிக்கப்படுகின்றனர், நடத்தப்படுகின்றனர் என்ற வேதனையை வெளிப்படுத்தாமல் இருக்க இயலவில்லை.


இராமனின் எளிமை


இன்று ஆள்வோருக்கு அச்சம் மிகுதி. காவலர்கள் புடைசூழவே உலா வருகின்றனர். குண்டுகள் துளைக்காத கார்கள், மேடைகள் இன்றைய ஆள்வோருடைய தேவையாகி விட்டன. கோசல நாட்டில் அப்படியில்லை.

இராமனுக்குப் பகைவர் என்று யாரும் இல்லை. சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனிடம் பகை கொண்டானில்லை. இராவணனை அழிக்க நினைத்தானில்லை. தூதுவர்கள் மூலம் சீதையை விட்டுவிட்டு உயிர் பிழைத்துப் போகும்படி சொல்லியனுப்பியதை நினைவிற் கொள்க. செருகளத்தில் கூட இராமன், இன்று போய் நாளை வா!’ என்று கூறும் அறநெஞ்சினன் என்பதைப் புரிந்து கொண்டால், இராவணன் அழிவு இராமனால் ஏற்பட்டது என்பதைவிட, வீரத்தின் பேரால் பொய்மையான