பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

245


புரியும் தன்மகன் அரசு எனின் பூதலம் எல்லாம்
விரியும் சிந்தனைக் கோசலைக்கு உடைமை ஆம்; என்றால்
பரியும் நின்குலப் புதல்வற்கும் நினக்கும் இப்பார் மேல்
உரியது என், அவள் உதவிய ஒரு பொருள் அல்லால்!

(கம்பன் - 1477)

சிந்தை என்செயத் திகைத்தனை? இனி, சில நாளில்
தம்தம் இன்மையும் எளிமையும், நிற்கொண்டு தவிர்க்க
உந்தை, உன்ஐ, உன்கிளைஞர், மற்று உன்குலத்து உள்ளோர்
வந்து காண்பது உன் மாற்றவன் செல்வமோ? மதியாய்!

(கம்பன்-1479)

என்னும் பாடல்களை எண்ணுக. ஆக, கம்பன் 'உடையாரும் இல்லை; இல்லாரும் இல்லை' என்று கூறியது; கோசல நாட்டின் அமைப்பை அல்ல; கம்பன் காண விரும்பிய இலட்சிய நாடு இது. மேலும், 'கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை' என்றும் அல்லவா பாடுகிறான். ஆனால், இராமன் அயோத்தியை விட்டுப் புறப்படும் பொழுது பார்ப்பனன் ஒருவன் இரந்து வருகிற செய்தியைக் கம்பன் பாடுகின்றான்.

பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள்
அருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்து, அவன்
கருத்தின் ஆசைக் கரை இன்மை கண்டு, இறை
சிரித்த செய்கை நினைந்து, அழும் செய்கையாள்

(கம்பன் - 5094)

என்ற பாடல் கவனத்திற்குரியது.

இதனால் கம்பன் ஒரு சிறந்த பொதுமை நலம் கெழுமிய நாட்டை இலட்சியமாகக் கொண்டிருந்தான் என்பது உணரத்தக்கது. இன்னமும் கம்பனின் இலட்சியம்