பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

249


அடக்கம், எளிமை, பத்திமைப் பண்பு மிகுந்தவன். இராமனைக் கண்ணினால் நோக்கிக் கனிந்தனன்; மண்ணுறப் பணிந்து வணங்கினான். கையினால் வாய் புதைந்து நின்றான். இராமனை, தன் உயிர் தந்து காப்பேன் என்று உறுதி கூறினான்; ஆனால் இராமன் ‘நீ இந்த உலகை முழுவதும் உடையாய்’ என்று சொல்லி ‘நான் என்றும் உனக்கு உரிமை யுடையேன்’ என்று ஆறுதல் கூறினான். ஆக, குகன் நெடுந்தானையுடைய அரசனாக இருந்தும் அவனுடைய எளிமையை நோக்கும்போது, அமைதி தழுவிய அரசு கங்கைக்கரை அரசு என்று தெரியவருகிறது.

“புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள
இரவன் மாக்களின் பணி மொழி பயிற்றி”

என்ற சங்கப் பாடலுக்கு இலக்கணமாகக் குகன் அமைந்திருந்தான்.

போர்க் குகனின் படகுத் துணைகொண்டு இராமன் கங்கையைக் கடக்கின்றான். குகனை ‘யாதினும் இனிய நண்ப’ என்று நட்புரிமை கொண்டாடுகின்றான். இராமன் செல்லும் இடத்தில் தனது உயிர்மேவ, குகன் தங்கினான்.

அசோகவனத்தில் சிறையிருந்த சீதை, பழைய நிகழ்வுகளை நினைவு கூர்கிறாள். அந்தப் பழைய நிகழ்வுகளில் சீதையின் மனத்தில் பசுமையாக நின்றது. இராமன் குகனை ‘யாதினும் இனிய நண்ப’ என்று அழைத்துப் பாராட்டியது ஆகும். சீதை, இராமன் குகனைத் தோழமையாகக் கொண்ட நிகழ்ச்சியை,

ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு ‘எம்பி நின் தம்பி, நீ
தோழன்; மங்கை கொழுந்தி’ எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்

(கம்பன்-509)

என்று நினைந்து பார்க்கிறாள்.

இ. V. 17