பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கிட்கிந்தையில் சமுதாய அமைப்பு இருந்ததா? குரங்கினமானாலும் கம்பன் மானுடம் போலவே அமைத்துப் பாடுகிறான்.

கிட்கிந்தா நாட்டில் சொல்லின் செல்வனாகிய அனுமன், சாம்பவான், அங்கதன் முதலிய சிறந்த பாத்திரங்களையும் அந்தப் பாத்திரங்களின் இயல்புகளையும் திறன் களையும் அறிந்து அனுபவிக்க முடிகிறது. ஆதலால், கிட்கிந்தையில் சமுதாய அமைப்பும் உயர்ந்து விளங்கியது என்று நம்பலாம்.


இராமன் கூறிய அரசியல் நெறி


கிட்கிந்தை அரசு எவ்வளவுதான் வலிமையுடையதாக இருந்தாலும் ஆங்கு உள்நாட்டுச் சண்டை நிலவியது; பதவிச் சண்டை நடந்தது. வாலி, சுக்கிரீவனிடமிருந்த அரசையும், சுக்கிரீவன் மனைவி அருமருந்தன்ன உருமையையும் கூடக் கவர்ந்து கொண்டான். பின் இராமனின் உதவியால் அனுமனின் வழிகாட்டுதலுக்கிசைய, வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு இராமன் முடிசூட்டுகிறான். முடி சூட்டியதோடன்றி ஒரு நல்ல அரசியல் அறிவுரையையும் வழங்குகின்றான்.

‘வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும்
தீமைதீர் ஒழுக்கின் வந்த திறத்தொழில் மறவரோடும்
தூய்மைசால் புணர்ச்சி பேணி, துகளறு தொழிலை ஆகி
சேய்மையோடு அணிமை இன்றி தேவரின் தெரிய நிற்றி’.

(கம்பர் - 4122)

வாய்மையோடு பொருந்திய அறிவுரை தரும் அமைச்சர் பெருமக்களோடும், தீமை ஒன்றும் செய்யாத மறவரோடும் தூய்மையான உறவைப் பேணி வளர்த்துக் கொள்க என்கிறான் இராமன். அறிவு, கூர்மையாகும் பொழுது பொய்யும் தீமையும் நிகழ்தல் உண்டு. ஆதலால்