பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இன்று நாடு விட்டுக் காடு வந்து, அரசை இழந்து, மனைவியை இழந்து அல்லலுறுவதைச் சான்றாக எடுத்துக் கொள்’ என்று இராமன் கூறும் அறிவுரையை உன்னுக.

“சிறியர் என்று இகழ்ந்து நோவு
செய்வன செய்யல் மற்று, இந்
நெறி இகழ்ந்து யான் ஓர் தீமை
இழைத்தலால் உணர்ச்சி நீண்டு
குறியது ஆம் மேனி ஆய
கூனியால் குவவுத் தோளாய்
வெறியன எய்தி, நொய்தின்
வெந்துயர்க் கடலின் வீழ்ந்தேன்”

(கம்பன் - 412)

என்பான் இராமன்.

கூனிக்கு, நான் இழைத்த தீமையால் கூனியின் பகைமை உணர்ச்சி நீண்டது. ஆயினும் காலம் வந்துழி அந்தச் சாதாரணக் கூனியும் கூடப் பகை முடித்துக் கொள்ள முடிந்தது. அதனாலேயே நான் நாடு இழந்தேன்; காடு வந்தேன்; மனைவியை இழந்தேன்!” என்று இராமன் கூறுவதால், கூனிக்கு இழைத்த தீமை அவன் நெஞ்சத்தை உறுத்திக் கொண்டிருந்தது என்பது தெரிகிறது. ஆனால், அந்த உறுத்தல் ஏன் செயலாக்கம் பெறவில்லை. காரணம் அவள் சிறியள் என்ற எண்ணம் தானே! இன்று நமது நாட்டு அரசியலில் - ஆட்சியில் - அல்லற்படுவோர் சிறியோர்தாம் என்பதை எவரேனும் மறுக்க இயலுமா? ஏன் நமது அன்றாட வாழ்விலும் கூடப் பெரியோர் பெரும்பிழை செய்தாலும் பார்த்தும் பாராமல் இருக்கிறோம். சிறியோர் ஒரு சின்னத் தவற்றைச் செய்தாலும் சினந்து வீழ்கின்றோம். இது தவறு என்று சுக்கிரீவனுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இராமன் வாயிலாகக் கம்பன் அறிவுறுத்துகின்றான்.

காமம் கொடிது. நாடாள்வோர் பெண் வழிச் சேறல் ஆகாது என்றார் திருவள்ளுவர். இங்கு இராமனும் ‘மங்கையர்