பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

257


மண்ணோடு எடுத்து வந்ததாகக் கூறுவது கவிச்சக்கரவர்த்தி கம்பனின் உத்தி. இராவணன் எளிதில் நெறிமுறை பிறழாதவன் என்று கம்பன் உணர்த்த ஆசைப் பட்டதின் விளைவு இந்த உத்தி! சீதையைக் கவர்ந்த இராவணன் தனது அரண்மனையிலோ அந்தப்புரத்திலோ அவளைத் தனிமைப்படுத்தி வைக்காமல், திறந்த வெளியில் அசோகவனத்தில் - பல மகளிர் சூழக் காவலில் வைத்தது இராவணனுடைய நடையைப் பற்றிய ஆய்வுக்குரிய செய்தி.

சீதை உணர்த்திய அரசியல் நெறி

சீதையை இராவணன் வேண்டுகின்றான். அப்போது சீதை இராவணனுக்கு ஒரு அரசியல் நடைமுறையை உணர்த்துகின்றாள். ஆட்சியாளர்களை - அரசை - விமர்சனம் செய்பவர்களும் அரசின் தவறுகளைக் கடிந்து கண்டனம் செய்பவர்களும் இல்லாது போனால் அந்த அரசு அழியும் என்பது திருக்குறள் கருத்து.

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானும் கெடும்’

என்பது திருக்குறள்.

சீதை இராவணனை நோக்கி,


“கடிக்கும் வல் அரவும் கேட்கும்
மந்திரம்; களிக்கின் றோயை
‘அடுக்கும், ஈ(து) அடாது’ என்று ஆன்ற
ஏதுவோடு அறிவு காட்டி
இடிக்குநர் இல்லை; உள்ளா;
எண்ணியது எண்ணி உன்னை
முடிக்குநர்; என்ற போது
முடிவு அன்றி முடிவது உண்டோ”

(கம்பன்-5204)