பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விரும்பி ஏற்று மகிழ்ந்து வாழ்ந்தனர். தமிழர் வாழ்வியலில் காதல் இருந்தது; வீரம் விளங்கியது: அறம் இடம் பெற்றிருந்தது. சங்க காலத் தமிழர் எத்துறையிலும் எல்லை இகந்து செல்லாநெறி மேற்கொண்டொழுகினர்.

காதலிற் சிறந்து விளங்கிய தமிழர்கள் செருகளத்திலும் சிறந்தே விளங்கினர். செருகளத்தில் சிறந்து விளங்கிய வீரர்கள் காதற்களத்தில் தோல்விகளைத் தழுவத் தவறியதில்லை. சங்க காலத் தமிழர் வாழ்வியலில் தலைவன், தலைவி, சமுதாயம், ஊரவர், அரசு என உறுப்புக்கள் அனைத்தும் படிமுறையில் முழுமையுற வளர்ந்திருந்தன. சங்க காலத் தமிழர் வாழ்க்கை இன்றைக்கும் ஏற்புடையது.

ஆனால், நம்முடைய நல்லூழின்மையின் காரணமாக அயல் வழக்கின் தலையீடுகளால் தமிழர்கள் இன்று மொழியால் தமிழர்களாக வாழ்கின்றனரேயன்றி, தமிழியல் தழுவிய வாழ்க்கை வாழ்கின்றாரில்லை.

மனித வரலாறு முன்னோக்கிச் செல்வது என்றாலும், தமிழர்களைப் பொறுத்த வரையில் தடம் புரண்டு விட்டதால், திரும்பச் சென்று சங்க காலத் தமிழர் வாழ்க்கையை மீண்டும் தொடங்கினாலும் அது சிறப்புடையதாகவே அமையும். சங்க காலத் தமிழர் வாழ்வியலில் சிலவற்றைக் காண்போம்.

இன்று இந்தியத் துணைக் கண்டம் ஒரு நாடாக இல்லை; ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்தியத் துணைக் கண்டம் முழுதும் ஒரு நாடாக விளங்கியது. ஆங்கிலேயராட்சிக்கு முன்பு அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் இந்தியா முழுவதும் ஒரு நாடாக இருந்ததென்று சொல்வர். ஆயினும் அப்பொழுதும் தமிழ்நாடு அசோகர் ஆட்சிக்குக் கீழ் இருந்தது என்று வரலாற்றுக் குறிப்பில்லை.

ஆங்கிலேயர் ஆட்சியில்தான் இந்தியா ஒரு நாடாக உருப்பெற்றது என்பது வரலாற்று நூற் கருத்து. ஆயினும்,