பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

297


அங்கதனிடம் பலிக்கவில்லை! இராவணன் சொல்லைக் கேட்ட அங்கதன் நகைத்தான். 'என்னைப் புரிந்து கொள்ளாமல் வாயில் வந்தபடியெல்லாம் பேசுகின்றாய்! இதனால் எல்லாம் நான் உன் வசப்பட மாட்டேன்! நாயிடம் சிங்கம் ஆட்சி பெறுமோ? ஒரு போதும் பெறாது!' என்றான் அங்கதன். ‘இராவணனே! அரக்கர் குலத்து அழிவிற்கு மூலகாரணமாக உள்ள இராவணனே! போருக்கு அஞ்சி அரண்மனையில் ஒளிந்து கொண்டிருக்கின்றாய்! தேவி சீதையை விட்டு விடு! அல்லது இராமனுடன் போர் புரியப் போர்க்களத்திற்கு வருக! என்று என் தலைவன் இராமன் அறிவிக்கச் சொன்னான்!” இராவணனின் பாட்டி தாடகையை வெட்டி வீழ்த்திப் பருந்துக்கு இரையாக்கிய காலத்தில் இராவணன் எங்கே போனான்: இராவணன் மாமன் சுபாகு என்பவன் போராடி அழிந்த காலத்திலும், எங்கிருந்தான் என்ற தெரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தான். ஏன்? இராவணன் தங்கை சூர்ப்பணகை இலக்குவனால் மூக்கறுபட்டு மானபங்கப்படுத்தப்பட்ட போதும் இராவணன் போருக்கு வரவில்லையே! ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ என்பதற்கு இலக்கியம் இராவணன். ‘இராவணனுக்கு ஆண்மையே இல்லை' என்று இராமன் இராவணனைப் பழித்துரைத்ததையும் அங்கதன் எடுத்துக் கூறினான். தூது பயன் தராததால் அங்கதன் இராமனை வந்தடைந்தான். இராமனிடம் தூதின் முடிவை மிகவும் சுருக்கமாக,

“முற்றஒதி என்? மூர்க்கன், முடித்தலை
அற்றபோது அன்றி ஆசை அறான்”

(கம்பன் - 7015)

என்று கூறினான். ‘சமாதானம் இல்லை; சீதையின்பால் உள்ள ஆசையை அவன் முடியிழக்கும் வரையில் விடமாட்டான். இராவணனின் முடி வீழ்தலுக்குரிய போர் தேவை. இதுவே என் தூதின் முடிவு’ என்றான் அங்கதன்.