பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இந்தியா, கடிதூர்ந்து செல்லும் ஊர்திகளில்லா அக்காலத்திலேயே ஒரு நாடு, ஓராட்சி என்ற அமைவினைப் பெற்றது, பெருமைப்படுதற்குரிய செய்தி.

ஒரு நாடு என்ற உணர்வு இருந்ததால் அன்று வடபுலத்தில் நடந்த பாரதப் போரில் பொருத வீரர்களுக்குச் சேரலாதன் என்ற அரசன் சோறு வழங்கினான். எப்படிச் சோறு வழங்கினான்: பாரதப் போரில் ஒரு பக்கம் சார்ந்து சோறு வழங்கவில்லை. நடுநிலைக் கொள்கையென்பது சங்க காலத் தமிழர் கண்ட கொள்கை.

கெளரவரும் பாண்டவரும் பொருது நின்றனர். அப்போரில் சேரப் பேரரசு நடுநிலைமை வகித்தது; இரண்டு தரப்பினரின் படைக்கும் சோறு வழங்கியது.

இன்றைய அரசியலில் மிகச் சிறந்த கொள்கைகளாக விளங்கும் “நடுநிலை”, ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடாமல் வேறுபாடு இன்றி உதவி செய்தல் ஆகிய கொள்கைகள் சங்க காலத் தமிழர் ஆட்சியியலில் இடம் பெற்றிருந்தன என்பது அறியத்தக்கது. இத்தகைய வரலாற்றுச் சாதனை செய்ததால் இச்சேரலாதனைப் “பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்” என்று முடிநாகனார் பாராட்டுகின்றார்.

சங்க காலத் தமிழர் வாழ்வியலில் ஆட்சிமுறை சிறப்புற அமைந்திருந்தது. மன்பதை காக்கும் அரசாக விளங்கிய சங்க காலத் தமிழரசியல் அறிஞர்களால், அறங்கூறி வழி நடத்தக் கூடியதாகவும் முறை திரிந்துழி இடித்து உரைத்து நெறியில் நிறுத்தும் இயல்புடையதாகவும் அமைந்திருந்தமை உலக வரலாற்றில் காண முடியாத ஒன்று.

மிகச் சிறந்த பேரரசுகளாக விளங்கிய இங்கிலாந்து, ஃபிரான்சு ஆகிய நாடுகளில் ஆட்சியை எதிர்த்து மக்கள் புரட்சி செய்தனர்; அரசர்களைக் கொன்றனர். தமிழக வரலாற்றில் அத்தகைய வரலாறுகள் நிகழ்ந்ததில்லை. ஏன்?