பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கத் தமிழர் வாழ்வியல்

21



அரசர்கள் நல்லவர்களாகவும், நல்லன கேட்பவர் களாகவும் செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தர்களாகவும் மக்கட்கு, உயிரென விளங்கி உற்றன செய்தும் உறாதன நீக்கியும் நல்லன செய்த கொற்ற முடையவராகவும் விளங்கியதால் அரசை எதிர்த்த கிளர்ச்சிகள் இல்லை.

ஒரோ வழி, சில அரசர்கள் நெறிமுறை பிறழ்ந்தபோது சங்க காலப் புலமைச் சான்றோர்கள் அரசுக்கு எடுத்துக் கூறினர்; அறங்கூறி ஆற்றுப்படுத்தினர்.

சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை வெள்ளைக்குடி நாகனார், அறநெறியில் ஆற்றுப்படுத்து கின்றார். புலவரின் உரையில் அறம் இருக்கிறது; அரசியல் இருக்கிறது; தரமான கேலியும் இருக்கிறது.

அரசனிடம் நீதி வேண்டுவார்க்கு, மழை வேண்டி நிற்கும் உழவர்க்கு உரிய காலத்தில் பெய்யும் மழைபோல நீதி கிடைக்க வேண்டும். “நீதியைக் காலம் கடத்துவது நீதியை மறுப்பதற்கு ஒப்பானதே!” என்பர். நீதி உரிய காலத்தில் கிடைக்க வேண்டும் என்ற நெறியைச் சங்க காலம் பொன்னே போற் போற்றியிருக்கிறது.

அரசன், தன் கொற்றத்தின் அடையாளமாகிய வெண் கொற்றக் குடையின் கீழ் அமர்ந்திருக்கிறான். குடை வெயிலை மறைப்பதற்கல்ல என்று புலவர் நையாண்டி செய்கின்றார். பின் ஏன் குடை? “வருத்தமுற்ற குடியைத் தண்ணளி தந்து நிழல் போல் பேணுதலின் சின்னமே வெண்கொற்றக்குடை.

செருகளத்தில் வெற்றி பல பெற்றோம் என்று எண்ணி மகிழற்க! பொருநர் தந்த வெற்றி, நிலத்தை உழுது வேளாண்மை செய்து செந்நெல் குவித்த உழவர் தந்த கொடை, வெற்றி! மறவற்க!” என்று எடுத்தும் கூறும் அறவுரை.