பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





16


இராமனும் சீதையும்


இராமாயணம் ஓர் இந்திய தேசிய காதை, பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே நாடு முழுதும் பேசப்பட்ட ஒரு காதை. இக் காதை சாதி, மொழி, இனம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து நாடு முழுதும் பரவியது. இக் காதையை இலக்கியமாகப் படைக்க விரும்பியவர்கள் தத்தம் மொழியில் அந்தந்தச் சூழலுக்கேற்பக் கூட்டியும் குறைத்தும் செய்துள்ளார்கள். இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் இராமகாதையுண்டு. இவை எல்லாவற்றிலும் கதை ஒரு மாதிரியாக இல்லை. நிறைய வேறுபாடுகளும் முரண்பாடுகளும் உண்டு. முரண்பாடுகளுக்குக் காரணம், காலத்தின் சூழ்நிலையும் மொழிவழி நாகரிக அமைப்புமாகும். வால்மீகி, வடமொழியில் இராமகாதையைச் செய்தார். தமிழில் கம்பன் செய்தான். வால்மீகிக்கும் கம்பனுக்கும் காவியப்போக்கில் நிறைய வேறுபாடுகள் உண்டு. கம்பராமாயணம் ஒரு மொழி பெயர்ப்பு நூலன்று. முதல் நூலைத் தழுவி எழுந்ததேயாகும். இத்தகைய இராம காதையை ஆராய்கின்றபோது, அந்தக் கவிஞனின் கூற்றுக்களை வைத்தே ஆராய வேண்டும். இங்கொன்றும்