பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.






17
மெய்யறிவு


“மெய்” என்ற சொல்லை, உண்மை என்று வழங்குவது மரபு. இல்லை, உண்மை என்ற வழக்கே பெருவழக்கு. உண்மை என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் “சத்” என்ற சொல் வழங்குகிறது. உண்மை என்ற சொல், இன்றைய உலக வழக்கில் நடந்தது என்ற கருத்தில் வழங்கப் பெறுகிறது. இஃது ஒரு திரிபேயாம் அல்லது உபசரணை வழக்காக ஏற்றுக் கொள்ளலாம். உண்மை என்றால் எது உள்ளதோ அதுவே உண்மை. அதாவது கால தத்துவத்திற்கு உட்படாது அப்பாற்பட்டு நின்று விளங்கும் பொருள் எதுவோ, அதுவே உண்மை. இந்த உண்மையைத் தேர்ந்து தெளிதல் எளிதன்று.

அப்பரடிகள் “சிந்தையுள் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி” என்றார். ஏன்? நமது பொறிகளும் புலன்களும் வரையறுக்கப் பெற்ற ஆற்றலுடையவை. இவை எல்லைகளைக் கடந்த ஒன்றை எங்ஙனம் தேர்ந்து தெளியும்? உண்மை-மெய் என்று போற்றப் பெறுவது கடவுளேயாம். தெளிதல் எளிதன்று. அறியாமையும் மயக்கமுமே உயிர்களிடம் இயல்பாய் அமைந்தவை. அறியாமை என்றால் ஒன்றும் தெரியாமை என்பது பொருளன்று. ஒன்றைப் பிறிதொன்றாக முறை பிறழ அறிதலே அறியாமை,