பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.






20


தங்கத் தலைவி தருவார்!


கழகம் கதிரொளி பரப்புவதற்குச் சாதனம் “கழகக் கதிர்”. கதிர் கழகத்தை இனம் காண உதவுவது. பழங்காலம் தொட்டே தமிழர்கள் தமிழ்க் கழகம் வைத்துத் தமிழைப் பாதுகாத்தனர்; வளர்த்தனர். கடல்கொண்ட தென்குமரி நாட்டிலேயே தமிழ்க் கழகம் இருந்ததாக வரலாறு. சங்க காலத்தில் கடைசித் தமிழ்க் கழகம் இருந்தது. கடல்கொண்ட தென்குமரிக் கண்டம் தொடங்கித் தமிழ் நாட்டு வரலாற்றில் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்க் கழகங்கள் இலக்கிய உலகத்திற்குச் செய்துள்ள பணிகள் நிலனும் வானும் உள்ளவரை நிலைத்து நிற்கும். இன்று சங்க இலக்கியங்கள் என்று போற்றப்படுபவை தோன்றிய பொற்காலம் முத்தமிழ்ச் சங்க காலமேயாகும்.

மொழி வரலாற்று அடிப்படையில் இலக்கியங்கள் தோன்றிய பிறகே இலக்கணம் தோன்றும். இன்று நம்மிடத்தில் உள்ள பழைமையான இலக்கணநூல் தொல்காப்பியம். தொல்காப்பியம் மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. ஆனால், தொல்காப்பியத்திலேயே சமஸ்கிருதச் சொற்களின் கலப்பு - நாகரிகக் கலப்புத் தொடங்கிவிட்டது.