பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கத் தமிழர் வாழ்வியல்

27



உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே
வித்தி வான்நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற் றாயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்டு உதவாதே அதனால்
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம இவண்தட் டோரே
தள்ளா தோர் இவண தள்ளா தோரே.

புறம். 18-30

என்ற குடபுலவியனார் பாட்டு அறிக.

ஒரு நாடு சிறப்புற்று விளங்க, அந்நாட்டின் அகத்திணை வாழ்க்கைக்கும் புறத்திணை வாழ்க்கைக்கும் உரிமை பூண்ட ஆடவர் நல்லவராய் அமைதல் வேண்டும். “நல்லவர்” என்பது ஓர் உயர்ந்த குறிப்புச் சொல். அறிவு, ஆற்றல், சீலம், பண்பாடு ஆகிய அனைத்தும் நிறைந்தவரையே நல்லவர் என்று கூறுவது சங்க இலக்கிய மரபு.

நாடு, நாட்டு நலன்கள் அனைத்தும் அமைந்ததாக இருந்தால் என்ன? இல்லாது போனால் என்ன? மேடாக இருந்தால் என்ன? இவற்றாலெல்லாம் நாடு வளமாக அமைந்து விடுவதில்லை. நாட்டின் குறைகளை நீக்கி, நாள்தோறும் பாதுகாக்கும் திறமுடைய ஆடவர்கள் இருந்தால்தான் அந்த நாடு வளமுடையதாக இருக்கும்.

அங்ஙனம் நாட்டில் நல்லவர்கள் வாழாது போனால் நாட்டின் இயற்கையையும் வாழ்வோர் அழித்து விடுவர். நாடு, இயற்கையில் நல்வளங்கள் அமைந்து விளங்காது போனாலும், நல்லோர் தமது அறிவறிந்த ஆள்வினையின் மூலம் அந்நிலத்தின் குறைகள் அனைத்தையும் நீக்கி, நலன்கள் நிறைந்ததாக்கி விடுவர். இந்த அரிய கருத்தினை ஒளவையார்,