பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கத் தமிழர் வாழ்வியல்

29



சங்க காலத்துச் சான்றோருள் பிசிராந்தையாரும் ஒருவர். அவர், ஆண்டில் முதியராக இருந்தும் மூப்பின் அடையாளமாகிய நரையின்றி விளங்கினார். அச்சான்றோரை, ஆண்டு பலவாகியும் நரையில ஆவது எங்ஙனம்? என்று புலவர்கள் வினவினர். வினாவிற்கு விடையாகத் தமிழினத்தின் நல்வாழ்விற்கு உரியதொரு பாடல் பிறக்கிறது. அப்பாடல் சங்க காலத் தமிழர் வாழ்வியலின் வளம் பேசுகிறது.

வீடும் ஊரும் நாடும் சமுதாயத்தின் உறுப்புக்கள். இம்மூன்றினிடையிலும் சங்க காலத்தில் முரண்பாடுகள் இருந்ததில்லை; மாறுபாடுகள் இருந்ததில்லை. எல்லா வற்றிலும் உடன்பாட்டு நெறி. ஒத்திசைந்து செல்லும் நெறி. அம்மம்ம! அத்தகைய அரிய வாழ்க்கையை மீண்டும் தமிழகம் காணுமோ!

அங்ஙனம் காணின், நரைத்த - வெள்ளையான உரோமங்களை, மையால் கருப்பூட்டிக் காட்டும் போலி இளமையைப் புறக்கணிக்கலாம். தெங்கின் இளநீரில் தவிர, வேறு எங்கும் வழுக்கையைக் காணாமற் செய்யலாம். அது என்ன அப்படி அற்புதமான வாழ்க்கை!

மனிதனுக்குக் காற்றும், தண்ணீரும், உணவும் மட்டும் வாழ்க்கையன்று. களிப்பும் மகிழ்ச்சியும் சேர்ந்ததுதான் அவன் வாழ்க்கையின் உயிரூற்று. வீட்டில் நல்ல மனைவியும் மக்களும் உளர். மனைவியும் மக்களும் நல்லறிவினர். அவர்களால் இன்பமே ஒழிய யாதொரு துன்பமுமில்லை.

அடுத்து, வாழ்க்கையில் பங்கு பெறுவோர் ஏவல் செய்வோர். பல சமயங்களில் ஏவல் செய்வோர் கொடுக்கும் இடர்ப்பாடுகளால் ஏவல் செய்வோரின்றி நாமே செய்து கொள்ளக் கூடாதா? என்று எண்ணத் தோன்றும். பலகால் சொல்லினும் எடுத்துக் கூறினும் இடித்துக் கூறினும் கேட்டுச் செய்யும் ஏவலரைக் காண்டது அரிதாக இருக்கிறது.