பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஆனால், சங்க காலத்து ஏவலர்கள் ஏவல் கொள்வார் கருதுவதையே கருதிச் செய்து முடிக்கும் இயல்பினராக விளங்கினர்.

அரசு, அதிகாரங்கள் உடையதாயினும் யாதொரு தீமையும் செய்ததில்லை; செய்யாது! அது மட்டுமன்று, அரசின் அதிகாரங்கள் காத்தற்கே பயன்பட்டன. ஆக்கத் திற்கும் காப்பதற்கும் பயன்படும் அதிகாரமே அதிகாரம்.

ஆதலால் அச்சமும் கவலையும் இன்றி உண்டுறங்கி வாழும் பேறு கிடைக்கிறது. என்னுடைய ஊர் நல்ல ஊர். என்னுடைய ஊரில் கல்லா மாக்கள் இல்லை. என்னுடைய ஊரில் பொறிகளை, மதம் பிடித்த களிற்றைப் போலத் தத்தம் போக்கில் அலைய விடுவாரில்லை.

நன்றாகப் பழுத்த கனிகள் போல அவர்கள் சால்பு நிறைந்த பொறிகளையுடையவர்கள். நற்குணங்களை யெல்லாம் தமக்கே உரிமையுடைய சான்றோர்கள் பலர் வாழ்கின்றனர். அவர்கள் கொள்கையுடையவர்கள், அடக்க முடையவர்கள். அவர்களைக் காண்பதிலும் அவர்கள் சொற்களைக் கேட்பதிலும் துன்பம் தொலைந்தது; இன்பம் பெருகி வளர்ந்தது. அதனால், ஆண்டுகள் பலவாகியும் நரையிலேன் என்று கூறும் பெருமிதத்தை என்னென்று கூறுவது?

சங்க காலச் சமுதாயம் அனைத்துமே முழுமையுற்றிருந்தது என்பதற்கு இஃது ஒர் எடுத்துக்காட்டு. பிசிராந்தையார் பெற்ற பெருமிதத்தை இந்த நாட்டில் ஒவ்வொருவரும் பெற்றுக் கூறும் நாளே இந்த நாட்டின் பொன்னாளாகும்.

யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்கா கியர்என வினவுதி ராயின்
மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை