பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அந்தச் சிந்தனையின் வளர்ச்சியே “மரணமிலாப் பெருவாழ்வை” எண்ணிப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்தது.

ஆனால், இந்தக் கருத்தில் இந்தச் சமுதாய முழுமையான வெற்றி பெறுவதற்கு மாறாக, இன்றைக்கு வீட்டுக்கு வீடு புன்மை நிறைந்த சாதிவேற்றுமைகளால், அழுக்காற்றின் வழிப்பட்ட பகையால், வளம், மறுமை என்ற வேறுபாடுகளால் வேறுபட்டுக் கிடந்து எய்த்து அலையும் அவலத்தை என்னென்பது!

அது மட்டுமா? இந்த இன்பதுன்ப வேறுபாடுகளுக்குப் படைத்தோனே காரணம் என்ற பைத்தியக்காரத்தனமான கொள்கை சங்க காலத்திலேயே தலைகாட்டியிருக்கிறது. ஆனால், பக்குடுக்கை நன்கணியார், இவ்வுலகத்தின் இன்ப துன்பங்களுக்குப் படைத்தோனே காரணம் என்று தட்டிக் கழிக்கும் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறார்.

இவ்வுலக நிகழ்வுகள் இன்னாதனவாக இருக்கலாம். ஆனால் அப்படியே இருக்க அனுமதிக்கக் கூடாது. அறிவார்ந்த ஆள் வினையால் இன்னாதனவாக இருக்கும் உலக நிகழ்வுகளை இனியனவாக அமைக்க வேண்டும் என்று கருதி, வாழ்வியலை வழி நடத்திய சங்கத் தமிழர் வாழ்வே வாழ்வு!

ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பதைல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பிலாளன்
இன்னா தம்ம இவ் வுலகம்
இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே!

(புறம்-194)

ஒர் ஒப்பற்ற சமுதாய அமைப்பு, பொருளை ஈட்டுதலாலோ துய்த்தலாலோ மட்டும் அமைந்து விடுவதில்லை.