பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கத் தமிழர் வாழ்வியல்

35


செல்வத்தின் பயன் விரிந்தது. பரந்தது! செல்வத்தின் பயனை மிகச் சுருக்கியுள்ள இந்தக் காலத்தில் சங்ககாலத் தமிழர் வாழ்வியலை எண்ணிப் பார்ப்பது பயன்தரும்.

செல்வத்தின் பயன் ஈதலேயாம்! மற்றவர் வருந்தும் பொழுது அவர்தம் வருத்தத்தை மாற்றாது ஒருவன் தன் செல்வத்தைத் துய்ப்பானானால் அச்செல்வமே அவனை விட்டுத் தப்பித்துப் போய்விடும். இதனைச்

“செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே”

என்று புறநானூறு விளக்கிக்கூறும்.

செல்வத்தைச் செல்வத்திற்காக ஈட்டுவதோ, செல்வத்தைத் தாம் மட்டுமே துய்த்து வாழ ஈட்டுவதோ பழந்தமிழர் மரபன்று. களவியலில் தலைவன் ஒருவன் கற்பியல் நாடி அமைத்துக் கொள்வதற்காகப் பொருள்தேடச் சென்றிருக்கிறான். குறித்த காலத்தில் தலைவன் வரவில்லை. தலைவி துன்புறுகிறாள். அருகிலிருக்கும் தோழி தலைவன் வருவான், கவலற்க!” என்று ஆறுதல் கூறித் தேற்றுகிறாள். ஆனால், தோழியின் மொழியைத் தலைவி ஏற்று உடன்பட்டு ஆறுதல்பெற உடன்பட்டாளில்லை. ஏன்? தலைவி, தலைவனை முற்றாக அறிந்தவள்.

தலைவன் ஒரு கொடையாளி. தன்னை நாடி யார் வந்து கேட்டாலும் இல்லை என்று சொல்லாது வழங்கும் கொடைஞன் அவன். ஆதலால், அவன் பொருளீட்டச் சென்றது கற்பியல் நலம் கருதியன்று.

தம்மை நோக்கி “இல்லை” என்று இரந்து வருவோர்க்கு “இல்லை” என்று சொல்லும் நெஞ்சைப் பெறாதவனாதலால், தம்மை நாடி வருவோருக்குப் பொருள் ஈவதற்காகவேதான், அவன் பொருள் தேடச்சென்றிருக்கிறான். தலைவனுக்குத்