பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இனிய காண்க!

51



உலகம் இன்னாததாக இருக்கலாம். ஆனால் அந்த இன்னாமையை அப்படியே தாங்கிக் கொள்ள வேண்டும் அல்லது தாங்கும் சக்தியற்ற கோழைகளாக இருப்பின் எல்லாவற்றையும் துறந்து எங்கேயாவது ஓடிவிடவேண்டும் என்ற கொள்கை தமிழ் வழக்கன்று. ஏன்? வாழும் நெறியுமன்று. துன்பம் இயற்கையாக இருக்கலாம். ஆனால் அவற்றை மாற்றுவதற்குரிய சக்தி நமக்கு உண்டு என்று நம்பாத மனித உலகம் வாழ்ந்தும் வாழாத உலகமே!

மனிதனின் தோற்றம் அவன் ஒரு மையொற்றுத் தாளைப்போல வாழ்ந்து முடிப்பதற்காக அல்ல. அவனிடத்தில் இயல்பாக ஒரு போர்க் குணம் உண்டு. அவனுடைய படைப்பின் நோக்கமே அவன் போராட வேண்டும் என்பதுதான். அவன், ஓயாது போராடித் தொடர்ந்து நான்முகனோடு படைக்குமாற்றலில் போட்டிபோட வேண்டுமென்பதுதான். அவன் மண்ணைப் படைத்தால் மனிதன் மாளிகைகள் படைக்க வேண்டும்; கனிதரு சோலைகள் படைக்க வேண்டும். நான்முகன், படைத்த மண்ணில் உவரும், களரும் இருக்கலாம்.

ஆனால், மனிதன் படைத்த கனிதரு சோலைகளில் இனிய கணிகளே உண்டு. அவன் கடலைப் படைத்தால், இவன் கலம் படைப்பான். ஆக இவன் தீமையை எதிர்த்துத் துன்பத்தை எதிர்த்து வறுமையை எதிர்த்து, அறியாமையை எதிர்த்துப் போராடப் பிறந்தவனே. ஆனால் அய்யகோ! அவன் இன்று பக்கத்திலுள்ள மனிதனோடு போராடிக் கொண்டிருக்கிறான். அவன் தேவையில்லாத சாதிகளை, வேலிகளை, எல்லைகளைக் கற்பித்துக் கொண்டு, உடன் பிறந்த சகோதரர்களோடு போராடிக் கொண்டிருக்கிறான். மனிதனின் போர் முனை திசை திரும்பி விட்டது. அதன் காரணமாக உலகம் ஈட்டும் செல்வத்தில் பெரும்பகுதி படைப் பெருக்கத்திற்குப் பயன்படுகிறது. நாலு பேர் கூடினால் நாற்பது போலீஸ்காரர் தேவைப்படுகின்றனர்.