பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கேட்கிறது. வெளிப்பார்வையில் இந்தப் பறை முழக்கத்தின் வேறுபாடுகள் நம்மில் யாருடைய கவனத்தையும் கவர்வதில்லை. அய்யோ பாவம் ஒரோ வழி நம்முடைய கவனத்திற்கு வந்தாலும் அய்யோ பாவம்! ஆண்டவன் விட்ட வழி என்று அனுதாப வார்த்தைகளோடு முடிந்துவிடும். இது அறிவுக் கண்ணைத் திறப்பதில்லை. மரணமிலாப் பெருவாழ்வை அடைய முடியும் என்ற நம்பிக்கையைத் தருவதில்லை. அளவுக்கு மிஞ்சிய சகிப்புத் தன்மை துன்பத்தை, மரணத்தை எதிர்த்துப் பயனில்லை என்ற மூடக் கொள்கை காரணமாக வாழ்க்கையில் அறியாமை, ஆள்வினையின்மை, நொந்து நொந்து அணு அனுவாகச் சாதல் ஆகிய துன்பங்கள் வந்து சூழ்ந்தன. காலப் பேர்க்கில் மனிதன் இயற்கையை எதிர்த்துப் போராடுவதற்குப் பதில் இயற்கைக்கு அடிமைப்பட்டுவிட்டான். ஒரு வீட்டில் மகிழ்ச்சியும், ஒரு வீட்டில் துன்பமும் என்ற வேறுபட்ட காட்சிகளை பக்குடுக்கையார் இயற்கையன்று என்கிறார். இந்த வேறுபாட்டைப் படைப்பித்தவன் ஒருவன் இருப் பானானால் அவன் பண்பில்லாதவன் என்று சாடுகின்றார்.

எல்லோர் வீடுகளிலும் இன்பம். எல்லோருக்கும் வாழ்க்கை என்ற சமநிலைப் பண்ணின் சுருதி, புறநானூற்றுக் காலத்திலேயே கூடிவிட்டது. ஆம்! சுருதிக்கு இசைந்து பாடுகின்ற மனிதனைத்தான் காணோம். ஆரூரர் வாழ்க்கையிலும் பார்க்கின்றோம். ஆரூரர் அவிநாசிக்குச் செல்கின்றார். ஒரு வீட்டில் மகிழ்ச்சி வெள்ளம்! ஒரு வீட்டில் அழுகுரல். ஆரூரரின் அருளுள்ளம் அழுகுரல் கேட்கும் வீட்டை நோக்கி நடைபோடுகின்றது. ஆம்! அவர் நற்றமிழ் நாவலூரர்! தமிழ்ப் பண்பு அன்பின் வழிப்பட்டது. தமிழன் என்றும் வாழ்வாருக்கு மாரடிக்க மாட்டான். அவன் வாழ வேண்டியவர்கள் பக்கம். இதுவே சிறந்த சமயத் தத்துவமுங்கூட, அவிநாசியில் மகனை இழந்த பெற்றோரின் அழுகை மாற்றப் படுகிறது.