பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




4


பிசிராந்தையார் பெருவாழ்வு


சங்க காலக் கவிஞருள் நட்பிற்கு இலக்கணமாக விளங்கியவர் பிசிராந்தையார். பிசிராந்தையார் பழுத்த புலவர்: பண்பாளர்: நல்ல கவிஞர். நன்னெறி உணர்த்திய சீலர்; புரவலரால் கவிதை பாடிப் போற்றப் பெறும் புகழினைப் பெற்றவர். கோப்பெருஞ் சோழன் பிசிராந்தையாரின் பெருகிய நட்பினை ஆரத் துய்த்தவர்.

நட்பு என்பது எளிய சொல். ஆனால் அது அருமைப்பாடு நிறைந்த தவம். இருவர் அன்பினராதல் எளிதன்று. வாழ்க்கையில் அருமந்த நட்பினராக ஒருவர் கிடைத்தாலும் உலகை வென்று வாழலாம். நன்னட்புப் பெற்றார் துன்புறுதல் இல்லை. பிசிராந்தையார் நட்பையே தவமெனக் கொண்டு. உயிரை ஓம்பினார். சாதாரணமான உலகியலில் நட்பு என்ற பெயரில் உடலோம்பும் வாழ்க்கையே நடைபெறும். உடலுக்குரியன வழங்க இயலாதபோழ்து நட்பு திரியும்; மாறுபடும். ஆனால் பிசிராந்தையார் என்ற பெருந்தகையின் நட்பு உயிரோம்பும் நட்பு. அதனால்தானே “செல்வக் காலை நிற்பினும், அல்லற்காலை நீற்றிலன்-மன்னே” என்று கோப்பெருஞ்சோழன் கூறுகின்றான்.