பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கெடும். ஆதலால் மக்கட்பேறு பெரிதன்று. நன்மக்கட் பேறே மனைமாட்சியின் நன்கலமாகும்.

பிசிராந்தையாரும், அவர்தம் வாழ்க்கைத் துணைவியும் ஒருவரையொருவர் விஞ்சிய பண்பினர். அவர்தம் வாழ்க்கையின் பயனாகத் தோன்றிய மக்கள் நல்லவராயிருப்பதற்குத் தடையென்ன?

பழங்காலத்தில் ஏவல் செய்பவர் தரங்குறைந்த சொற்களால் “வேலைக்காரன்” “கூலிக்காரன்” என்று அழைக்கப் பெற்றதில்லை. “இளையர்” என்ற இனிய வழக்கு இருந்திருக்கிறது. ஏவல் கொள்வது, ஏவல் செய்வது என்ற முறை அனுபவத்தின் வழி வந்ததேயாகும். ஏவல் கொள்வோர் ஆண்டில் அனுபவத்தில் மூத்தவராகவும், ஏவல் செய்வோர் அவர் வழி இயங்குபவராகவும் இருத்தல் வேண்டும் என்பதே மரபு. ஏவல் செய்வோர் ஏவல் கொள்வோரின் அனைத்து நலன்களுக்கும் அரணாக விளங்க வேண்டும். அத்தகைய ஏவல் செய்வோர் கிடைத்தாலே ஏவல் கொள்வோர் வாழ்க்கை இன்பமானதாகவும், பாதுகாப் புடையதாகவும் அமையும். அங்ஙனம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லையாயின் ஏவல் செய்வோர் இன்றியே வாழ்தல் இன்பந்தரும்.

ஏவல் செய்வோர், ஏவல் கொள்வோர் கருதும் இயல்பிலேயே, கருதும் இயல்பினில் சிறந்து விளங்க வேண்டும். ஏவல் செய்வோர், ஏவல் கொள்வோரிடையே அடிப்படை நோக்கங்களில் முரண்பாடுகள் இருத்தல் கூடாது. ஏவல் கொள்வோர் நினைப்பனவே ஏவல் செய்வோர் நினைந்து, ஏவல் கொள்வோர் நலனையே நாடி ஏவல் செய்வார், வாழ்க்கையை அமுதமாக்கும் மருந்தனையர். பிசிராந்தையாருக்கு வாய்த்த இளையோர் அத்தகையோர்.