பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சம்பந்தமில்லை. புண்ணிய மூர்த்தியாகிய இறைவன் இவர்களைப் “பொக்கு” எனப் புறத்தே ஒதுக்கித் தள்ளுவன். வையகம் உண்ண உண்ணுதலே அருளியல் வாழ்க்கை கடவுள் தன்மை.

வெறுப்பு, ஒரு நற்பண்பல்ல, தீய பண்பு, விருப்பும் வெறுப்பும் ஆட்சி செய்யும் மனத்தில் தன்னலமே ஆட்சி செய்யும். ஆங்கு, அன்பு ஊற்றுக்கண் அடைபடும். அதன் காரணமாகச் சிந்தனையிலும், செயலிலும் அறமல்லாதன தோன்றும். யாரோடும் வெறுப்புக் கொள்ளுதல் கூடாது. அதனால் தீயவர்களையும் வெறுக்கக் கூடாதா? என்ற வினா எழலாம். தீயவர்களையும் கூட வெறுத்து ஒதுக்குவதால் அவர்கள் மாறப் போவதில்லை. மாறவும் முடியாது.

ஒருவரிடத்தில் தீமை என்பதும் அவராக எடுத்துக் கொண்டது அல்ல. தீமை என்று கருதி அறிந்துகொண்ட பிறகு எடுத்துக்கொண்டது அல்ல. பிறப்பின் சார்பும், சூழ்நிலையும் அதற்குக் காரணங்கள். ஆதலால் தீயோரை வெறுத்துப் பயனில்லை. தீமையை வெறுக்க வேண்டும். தீமையை வெறுத்து, அத்தீமையினின்றும் அதில் சிக்கியவர்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால் தீயன கொண்டு ஒழுகுவாரிடம் நமக்குக் கங்கு கரையற்ற அன்பும், பாசமும் பரிவும் வேண்டும். தீமையைக் கூட நேரடியாக வெறுத்துப் பயனில்லை. தீமை ஒருவகைக் காரியமே!

தீமை தோன்றுதற்குரிய காரணங்கள் பொருந்தாச் சமூகப் பழக்க வழக்கங்களேயாகும். உத்தரவாதமில்லாத வாழ்க்கை முறையும், சமூக நியாயங்களினின்றும் மாறுபட்ட நீதிநெறிக் கோட்பாடுகளாலும், சமூக சமநிலைக் கொள்கை முரண்பாட்டினாலும் வெறுப்புத் தோன்றுகிறது. இக்காரணங்களை மாற்றினால் தீமை தானே குறையும். அதனால் யாரோடும் வெறுப்புக் கொள்ளாது, ஒத்தார்,