பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




6


வாழ்க்கை நெறி


புகழ்! - அதுவே மனித வாழ்வின் இலக்கு. புகழ்பட வாழாத வாழ்க்கை, புழுவனைய வாழ்க்கை. ஆனால், எது புகழ்? வழிவழியாக வரும் குடும்பத்தின் சார்பாக வருவது புகழா? வழிவழி பெற்ற வளத்தின் துணைகொண்டு பெறுவது புகழா? இச்சைபேசி இரைப்பை நிறைப்போர் பிழைப்பு கருதி முகமனாகக் கூறுவது புகழா? இல்லை! இல்லை! தன்னுடைய முயற்சியால் செய்த சோதனைகள் மூலம் பெறுவதே புகழ்! மறக்கும் இயல்புடைய மனித சமுதாயத்தில் அம் மக்கள் மறக்கமுடியாமல் நினைவுகூறத்தக்க வாழும் வகையதே புகழ். மனிதகுல வரலாறு என்ற பேராற்று வெள்ளத்தால் முடி மறைக்கப்பெறாமல் அல்லது இழுத்தெறியப் பெறாமல் அந்த வெள்ளத்தில் எதிர் நீச்சல் செய்து காலகாலத்திற்குக் காலூன்றி நிற்க வல்லாரே உண்மையில் புகழ் பெற்றோர் ஆவர்.

ஒத்த கொள்கையுடையோர் புகழ்தல் இயற்கை உடனுறைந்து வாழ்கின்றவர்கள் புகழ்தலும் தவிர்க்க முடியாதது. அன்பால், பரிவால், பாசத்தால் பிணைக்கிப் பட்டவர்கள் புகழ்தல் இயற்கை. அன்பினால் பிணைக்கப் பட்டவர்களின் கண்ணுக்குக் குற்றங்கள் தெரியா.