பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை நெறி

79


குணங்களே தெரியும். ஆதலால், அன்பில் ஆர்வார் புகழ்தல் புகழேயானாலும் நூற்றுக்கு நூறு புகழாகாது. உண்மையான புகழ், பகைவரால் புகழப் படுவதேயாகும். ஆனால், இன்று வளர்ந்து வந்துள்ள சமுதாய மனப்போக்கில் பகைவரால் புகழப்பெறுதல் எளிதெனத் தோன்றவில்லை. ஒருவருக்கொருவர் பகைவராயிருப்பதிலும்கூட நெறி உண்டு; முறை உண்டு. நெறி தவறிய பகை உணர்ச்சி பண்பாடு ஆகாது. அதுமட்டுமல்ல, அதற்குப் பகை என்றும் பெயரில்லை. கயமை என்றே சொல்லவேண்டும். உண்மையான பகை, இலட்சியங்களின் பாற்பட்டதாக இருக்கும்; அவரவர் தம் இலட்சியத்தை அடைவதில் போட்டி இருக்கும். அவ்வழிபட்ட பகையே பகை. அந்தப் பகைமை உயர்வில் போட்டி போடுமே தவிர, இகழ்ச்சியில் போட்டி போடாது. அந்தப் பகைமை களத்தில் சந்திக்குமே தவிர அங்கு மறைவான சூதுக்கு இடமில்லை. விவாதம் இருக்குமே தவிர வசை இருக்காது. அப்படிப்பட்ட பகைவர் கண்ணின்று கண்ணறச் சொல்வர். ஆனால் ‘முன் இன்று பின்’னோக்கும் சொல்லைச் சொல்லமாட்டார்கள். ஒருவருடைய உரிமைக்கும், உடைமைக்கும், கல்விக்கும், புகழுக்கும் நெறிவழிப்பட்ட பகை இடையூறு செய்யாது. இன்றோ, பகை இலக்கணத்திற்குரிய பகைமை எங்கும் இல்லை. கயமைத்தனமே களிநடம் புரிகிறது. சிறுமை, குற்றமே தூற்றிவிடும் என்பதைப் போல், அத்தகையோர் குற்றமே தூற்றுகிறார்கள்; குணங்களைப் பார்க்க மறுக்கிறார்கள்; பாராட்ட மறுக்கிறார்கள். எப்படியும் கேடு செய்ய வேண்டுமென்றே நினைக்கிறார்கள். கயமைத் தனத்தால் காரியக்கேடு செய்கிறார்கள். இந்த யுகத்தில் விழுமிய புகழ் பெறுதல் அரிது. ஏனெனில், நெஞ்சுதலந்த நட்புடையோரும் நாட்டில் கிடைப்பதில்லை. நெறி வழிப்பட்ட பகைவரும் இல்லை. ஆதலால், எங்கும் நிகழ்வது முருகன் படலமே. மேடையெல்லாம் நாறுவது தூற்றுதலே. தாள்கள் எல்லாம் தாங்கிவருவது தரங்குறைந்த