பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சுத்தி. தகவு என்பது கொல்லாமை. கடவுள் உடலுக்குள் புகுந்து நின்று ஆட்டுவிக்கின்றான். பின் பக்குவம் வந்துழி அவனுக்குள்ளேயே ஒளித்துக் கொள்கின்றான். முன்னையது சிவ போதம். பின்னையது சிவ போகம்.

திருக்கன்றாப்பூர் திருத்தாண்டகப் பதிகத்தில் சிவன், உள்ளத்தில் எழுந்தருளியுள்ள பாங்கினை விளக்கமாகப் பாடியுள்ளார். மேலும்,

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே,

(5-90–7)

என்று அப்பரடிகள் அருளிச் செய்தமை அறிக. நல்லதை நினைப்பதில் நாட்டம் செலுத்தாதது நெஞ்சு. ஆதலால், “மட நெஞ்சு” என்றார். நெஞ்சம் அமைந்தது எதற்காக? ஈசன் தன் திருவருளை நினைக்கவே நெஞ்சம். நெஞ்சு நினைத்தால் அது சொல்லாக உருக்கொள்ளும்.

ஆதலால், இறைவன் திருவடிகளை நினைத்த நெஞ்சு வாய்க்கு வாழ்த்தும் பணியைத் தருகிறது. வாய் இறைவன் புகழை வாழ்த்தவே வாய்த்தது. தலை, அவன் திருமுன்பு தாழ்த்தி வணங்க வாய்த்தது. ஒரு மனிதனின் உறுப்புக்களில் தலை, நெஞ்சு, வாய் ஆகியன திருவருட் பணியில் திருத்தொண்டில் ஈடுபடுதலைப் போல வளர்ச்சிக்கும் துணை செய்யும். பாதுகாப்பும் தரும். உய்யும் நெறியும் இதுவேயாம்!

இத்தன்மையுடையோர் மன உறுதியால் ஆட்டிப் படைக்கும் ஐம்பொறிகளைக் காவலில் வைப்பர். ஒருபோதும் மனங்கலங்கார்; திகைத்து நிற்கமாட்டார். அப்பரடிகளுடைய சிந்தைக்குச் சுருதி ‘சிவாய நம’ என்ற திருநாமம்; திருமந்திரம்.