பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தரர்

353


தடுத்தது, ஒரே ஒரு திருமணத்தை! அதற்கு ஈடாக ஆளுடைய நம்பிகள் அதே சிவபெருமானைக் கொண்டு இரண்டு திருமணங்களைச் செய்து முடித்துக் கொண்ட வல்லாளன் என்று பாராட்டுகின்றார் மாதவச் சிவஞான முனிவர்.

ஒருமணத்தைச் சிதைவு செய்து வல்வழக்கிட்
டாட்கொண்ட வுவனைக் கொண்டே
இருமணத்தைக் கொண்டருளிப் பணிகொண்ட
வல்லாளன் எல்லாம் உய்யப்
பெருமணச்சீர்த் திருத்தொண்டத் தொகை விரித்த
பேரருளின் பெருமாள் என்றும்
திருமணக்கோ லப்பெருமாள் மறைப்பெருமாள்
எமதுகுல தெய்வ மாமால்,

(காஞ்சிப் புராணம் பக்.6)

என்பது மாதவச் சிவஞான முனிவர் பாடல்.

நம்பியாரூரர், சேக்கிழார் இயற்றிய பெரியபுராணக் காப்பியத்திற்கு நாயகன் என்பதை நினைவிற் கொள்வது நல்லது. நம்பியாரூரர் வரலாறுதான் பெரியபுராணத்துக்கு அடிப்படை மற்ற நாயன்மார்கள் வரலாறுகள் துணை வரலாறுகள் என்று கருதினால் தவறில்லை.

நம்பியாரூரர் திருமுதுகுன்றம் மணிமுத்தாற்றில் பொன்னை இட்டு, திருவாரூர்க் குளத்தில் எடுப்பதைச் சேக்கிழார் “தன்னை வினையின் குழியினின்று எடுத்தார்” என்று கவிக் கூற்றாகப் பாடுவது உள்ளத்தைத் தொடுகிறது; உருக்குகிறது.

உள்ளத்திலொரு துளக்கமிலோம்
உலகுய்ய இருண்டதிருக்
களத்துமுது குன்றர்தரு
கனகமாற் றில்விட்டு

கு.இ.VII.23