பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தரர்

395


என்றருளியமை அறிக. அதுபோலவே, “சங்கிலியார் மென் தடந்தோள் தோயும் பொழுதும் நின் திருவருள் மறக்க கில்லேன்” என்று அருளிய வற்றால் மனை வாழ்க்கை இழிவானதல்ல; முறையான மனைவாழ்க்கையிலேயே இம்மை, மறுமை நலன்களை அடையலாம் என்று உணர்த்துவது சுந்தரர் நெறி.

இறைவன் வாழ்த்துப்பொருள் மட்டும் அல்ல. வாழ்வுப் பொருள்; வாழ்க்கைப் பயணத்துக்கு அமைந்த தோழமை மிக்க துணை என்ற பார்வையில் இறைவனை வழிபட வேண்டும் என்பது சுந்தரர் நெறி.

மானுடத்திற்கு வாய்க்கும் நல்ல துணை தோழமையே யாம்! காதலிக்காமல் கூட வாழ்ந்து விடலாம். தோழர் இல்லாமல் வாழ முடியாது. ஒருவன் வாழ்க்கையில் அதிகம் பங்கேற்பவர் யார்? மனைவியா? தோழனா? தோழன்தான்!

மனைவி, துரிசுகள் - குற்றங்குறைகளை ஜீரணித்துக் கொள்ளமாட்டாள்; தோழன் ஜீரணித்துக் கொள்வான்; இதற்குப் பரவையார் - சிவபெருமான் இவர்களை ஒத்துப் பார்க்கலாம்! ஆதலால், வாழ்க்கை வளர, வாழ்க்கையில் இன்பம் பொதுள, பாதுகாப்புணர்வு தலைப்பட நல்ல தோழன் தேவை என்பது சுந்தரர் நெறி.

இன்பமும் துன்பமும் மனிதனின் படைப்பு. இவை மாற்றங்களுக்கு உரியன என்பது சுந்தரர் நெறி.

சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு நம்மனோர் வாழ்விற்கு ஓர் எடுத்துக்காட்டு! சுந்தரரின் திருமுறைப் பாடல்கள் நாளும் ஓதத் தக்கன. -