பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமுறையின் ஆற்றல்

397



காண்பது மானுடத்தின் கடமை என்பதே தமிழரின் கருத்து. ஆதலால், மரணம் இயற்கை நியதி என்ற நம்பிக்கை எல்லையைக் கடந்து சென்று மரணமிலாப் பெருவாழ்வு பெற்றிடச் சிந்தித்துள்ளனர்; எண்ணியுள்ளனர்.

ஆம்! தமிழர்களின் வழிபடு கடவுள் சிவம்! சிவன் பிறப்பு - இறப்பு அறியாத பெருந்தலைவன். விண்ணோர்கள் அமுதுண்டும் சாவ, நஞ்சுண்டும் சாவா மூவாத் தலைவன் சிவன். ஆதலால், சிவனை வழிபாடு செய்பவர்கள் மரணமிலாப் பெருவாழ்வு எய்தலாம். எய்தமுடியும். ஆனால், இதுவரையில் நடைபெறவில்லை! ஏன்? மரணத்திலிருந்து பலரை மீட்டவர்கள் கூட, இன்று நம்மிடையில் இல்லை. இவர்கள் மரணம் அடைந்தார்களா? இல்லை, இல்லை! ஒருபொழுதும் மரணம் அடைந்திருக்க இயலாது. பாம்பு சட்டையை உரித்துக் கொண்டாற்போல இந்த அருளாளர்கள் சிவானந்தப் பெருவாழ்வு நண்ணினர். சிவானந்தப் பெருவாழ்வில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதுவே மரபுவழிச் சிந்தனை!

சிவனை நினைந்து நினைந்து வழிபாடு செய்த அடியார்களும் நாயன்மார்களும் சிவனைப் போலவே ஐந்தொழில் செய்யும் ஆற்றல் பெற்றனர்.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப,

என்ற நூற்பாவுக் கிணங்க அமைந்தவை நாயன்மார்களின் திருமுறைப்பாடல்கள். இரும்பு சுடாது. நெருப்பொடு சேர்ந்த இரும்பு சுடும். நாயன்மார்கள் சிவன் திருவருள் உணர்த்தத் திருவருள் தோய்ந்து வந்தவை அத்திருப்பாடல்கள். அதனாலன்றோ “என்னுரை தன்னுரையாக” என்று சிவபெருமான் ஏற்றுக் கொண்டாதாகத் திருஞானசம்பந்தர் அருளிச் செய்கின்றார். தளரா உறுதியுடன் 'ஆணை நமதே' என்றும் அருளிச் செய்திருப்பதையும் உணர்க. ஆனால் அப்படிப்