பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமுறையின் ஆற்றல்

399



திருநாவுக்கரசின் சடலத்தை மூடி மறைத்துவிட்டு அப்பரடிகளுக்குத் திருவமுது படைக்கின்றார். அப்பரடிகள் மூத்த திருநாவுக்கரசை உடனிருந்து உண்ண அழைக்கின்றார். அப்பூதியடிகள் மூத்த திருநாவுக்கரசின் மரணத்தை மறைக்க “அவன் இப்போது இங்கு உதவான்” என்றார். அப்பரடிகள் விட்டபாடில்லை. அப்பூதியடிகள் உண்மையைக் கூறும் நிலை வந்தது. அப்பரடிகள் மிக வருந்தி, “ஒன்று கொலாம்” என்று பதிகம் எடுத்துப்பாடி மூத்த திருநாவுக்கரசை எழுப்பினார். மூத்த திருநாவுக்கரசு எழுந்தான். இங்குச் செத்தவரை உடலிருந்த நிலையில் மீட்டது தமிழ் மறை. செத்தாரை எழுப்பிய அற்புதம் இது. இங்கு ஒருவரின் உடல் இருந்தது.

நம்பியாரூரர் அவிநாசிக்குச் செல்கிறார். அவிநாசியில் ஒரு வீட்டில் அழுகுரல் கேட்கிறது. இன்னொரு வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி வழிகிறது. தமிழர் மரபு இதனை ஏற்றுக் கொள்வதில்லை. சங்ககாலக் கவிஞர் பக்குடுக்கை நன்கணியார்,

ஒரில் நெய்தல் கறங்க ஒரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப,

என்று பாடினார் அல்லவா? அவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நம்பியாரூரர் அவிநாசிக்குச் சென்ற பொழுதும் அதே நிலை! எனவே, “இரண்டும் உடன் நிகழ்வது ஏன்?" என்று கேட்டார், நம்பியாரூரர். இரண்டு வீட்டிலும் ஒரே நாளில் ஆண் மகவு பிறந்திருக்கிறார்கள். ஒருவீட்டாரின் மகன் குளிக்கச் சென்ற இடத்தில் முதலையால் விழுங்கப்பெற்றான். அதனால் அழுகை; துன்பம், துயரம். பிறிதொரு வீட்டில் மகனுக்குப் பிறந்தநாள் விழா. இந்த வேறுபாட்டினை நம்பியாரூரரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஆனால் குளத்திலோ தண்ணீர் இல்லை; முதலையும் இல்லை; பையனும் இல்லை. அவனது