பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொய்யிலா அடிமை

87


தன்னுழைப்பில் வாழ்ந்தும் - வாழ்வித்தும் வாழ்தலே வாழ் வாங்கு வாழும் வாழ்க்கை! உலகியலில் மனிதன் அடிமைப் படுத்தப்படுகிறான். உலகியல் அடிமையில் அன்பின் கிழமை இல்லை; அறிவின் ஆக்கமில்லை; இன்பம் ஆமாறில்லை. இஃது அறியாமை வாழ்வு; அச்சத்தின் வழிப்பட்டது; துன்பமே சூழ்வது!

அருளியல் அடிமை பிழைப்புக்காக அல்ல; வாழ்தலுக்காக! அருளியல் அடிமையில் அடிமை கொள்வானும் அடிமையாக இருக்கிறான். அடிமைப்படுவானும் அடிமையாக இருக்கிறான். அடிமை ஏற்கும் ஆண்டவன் ‘அடியார்க் கெளியன் சிற்றம்பலவன்’ என்று எழுதிய கைச்சாத்து, வரலாற்றுச் சிறப்புடையது. அருளியல் அடிமையில் அறிவு சிறக்கிறது; ஞானம் பெருகி வளர்கிறது; அன்பு நனிசிறந்து அருளாக மலர்கிறது. அம்மம்ம! அடிமைப் படுதல் தவறன்று. ஏன்? எதனால்? என்ற கேள்விக்கு விடை வரும்பொழுதே அடிமை கண்டிக்கப் பெறுகிறது. வெறும் ஆணுக்கு ஒரு பெண் அடிமையானால் இரங்கத் தக்கது. ஆனால், காதல் வழியில் அதே பெண் காதலனுக்கு அடிமையாதலும், அக்காதலன் காதலிக்கு அடிமையாதலும் வாழத் தெரிந்தவரின் சிறந்த பண்பு. அந்த வாழ்க்கையில் யார் ஆளுநர்? யார் அடிமை? என்ற கேள்விக்கே இடமில்லை. அந்தக் கேள்வி பிறக்குமானால் பிறந்த நிலையிலேயே அந்த மனையறம் இறக்கும். அங்கு உடல் பேசலாம். ஆனால் உயிர் பேசாது; உணர்வு பேசாது. உயிர்ப்பும் உணர்வும் இல்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? அது போலவே வளரக் காமுறும் ஓர் உயிர் இறைவனைக் காதலித்து ஆர்வமுடைய தாகி அடிமை பூணுகிறது. இந்த அடிமை வாழ்க்கையில் இறைவனுக்கு இருக்கும் இன்பத்தைவிட உயிருக்கே இன்பம் அதிகம். உலகியல் அடிமை வாழ்க்கையில் உயிர் தேய்கிறது; அருளியல் அடிமை வாழ்க்கையில் உயிர் வளர்கிறது.