பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

குயிலும்...சாரலும்

என்று கட்டுப்பாடு விதிக்கிறாள். இவளிடம் கெஞ்சியும் பயனில்லை; மிஞ்சவும் முடியாது என்ற நிலையில் குப்பன் மலையின் உச்சியை நோக்குகிறான். மலைப்பாய் இருக்கிறது. உச்சிக்குப் போய்ச்சேர எவ்வளவு நேரம் ஆகும். அதுவரை எப்படிப் பொறுப்பது என்று துடிக்கிறான். அவனுடைய மலைப்பைக் கண்டு அவள் ஏளனமாய் நோக்குகிறாள்.

குப்பன் கொண்டிருந்த காதல் வேகம் அவனைப் பறக்கச் செய்கிறது. அவளைத் தூக்கிக் கொண்டு மலையின் மேல் பாய்ந்து ஏறுகின்றான். அவளை நடக்க வைத்துக் கூட்டிச் சென்றால் நேரம் கடந்துவிடும் என்று தூக்கிக் கொண்டு பறக்கிறான். அவனுடைய வேகத்தைப் பாவலர் கூறும் அடிகளே வேகமாய்ப் பறக்கின்றன.

கிட்டரிய காதல்
கிழத்தி இடும்வேலை
விட்டெறிந்த கல்லைப்போல்
மேலேறிப் பாயாதே!
கண்ணின் கடைப்பார்வை
காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு
மாமலையும் ஒர்கடுகாம்!
மாமலைதான் சென்னி வளைந்து
கொடுத்ததுவோ
நாமலைக்கக் குப்பன்
விரைவாய் நடந்தானோ
மங்கையினைக் கீழிறக்கி
மாதே! இவைகளே
அங்குரைத்த மூலிகைகள்
அட்டியின்றிக் கிள்ளிக்கொள்

என்றுரைத்தான்.