பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 149

தேங்காய்ப் பழம் பிரசாதத் தட்டோடு அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்ததும் பூரணி மிரண்டாள். பேசிக்கொண்டிருந்த இருவரும் அவளைப் பார்த்து விட்டனர். அவர்கள் இருவரில் ஒருத்தி மங்கையர் கழகத்துக் காரியதரிசி. மற்றொருத்தி துணைத் தலைவி. இருதலைக்கொள்ளி எறும்பு போல் இரண்டுங் கெட்ட நிலையில் தவித்தாள் பூரணி. பார்ப்பதற்குக் காலித்தனமாகத் தோற்றத்தையுடைய எவனோ ஒரு முரட்டு இளைஞனோடு கைகோர்த்துக் கொண்டு முகத்தில் முறுவல் மிளிர அவளை நோக்கிப் படியிறங்கி வருகிறான் அரவிந்தன். அவள் மேல் பழியையும் அபவாதத்தையும் சுமத்தத் தேடிக் கொண்டிருக்கும் இருவர் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தர்ப்பம் நேரம் பார்த்து இடம் பார்த்துப் பொருத்தமாகச் சதிசெய்து கொண்டிருப்பதைப் பூரணி உணர்ந் தாள். திடீரென்று அவள் மனத்தில் ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். அரவிந்தனைப் பார்க்காதவள் போல் இலட்சியமே செய்யாதவள் போல எழுந்து விடுவிடுவென நடந்து விலகிப் படியேறினாள். பின்புறம் பூரணி என்று அவன், உள்ளத்து அன்பெல்லாம் குழைத்துக் குவித்து ஒலியாக்கி அழைக்கும் குரல் அவளைத் தடுக்கவில்லை; தயக்கமுறச் செய்யவில்லை. அந்தச் சிறிது நாழிகை நேரத்தில் அவள் தன் மனத்தை நெகிழ முடியாத கல்மனமாகச் செய்து கொண்டிருந்தாள். ஒட்டமும் நடையுமாகத் தெற்குக் கோபுர வாசலுக்குச் சென்று தெருவோடு போய்க் கொண்டிருந்த ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டாள். வாடகை கூடப் பேசிக் கொள்ளவில்லை. நேரே திருப்பரங் குன்றத்துக்கு விடச் சொன்னாள். பயத்தால்... அல்லது பயத்தைப் போன்ற வேறு ஏதோ ஒரு உணர்வால் உடல் வேர்த்தது அவளுக்கு. செய்யத் தகாததை, செய்யக் கூடாததைச் செய்து விட்டுப் போவது போலிருந்தது. யாருடைய மென்மையான உள்ளத்துக்கு அவள் தன்னை தோற்கக் கொடுத்தாளோ, அதே மென்மையான உள்ளத்தை மிதித்து விட்டுப் போகிறாள். இப்போது எந்த முகத்தில் அவள் இதயத்தை மலர்வித்த மலர்ச்சி பூத்ததுவோ அந்த முகத்தில் ஓங்கி அறைந்துவிட்டுப் போவதைப் போல் போகிறாள். 'பாவி எவ்வளவு பெரிய கொடுமை யைச் செய்கிறாய்? இது அடுக்குமா உனக்கு என்று அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/151&oldid=555875" இலிருந்து மீள்விக்கப்பட்டது