பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 179 பரங்குன்றத்தில் பார்த்தோமே அந்தப் பெண்ணின் தம்பி, அவன் பேராசிரியர் பையன். அவன் வந்து பணம் கேட்ட போதே எனக்குச் சந்தேகமாயிருந்தது. அதுதான் உன்னைப் பின்னால் அனுப்பினேன். விரைவாகப் போய் அவனை அழைத்து வந்துவிடு.'

அரவிந்தன் வேண்டுகோளை மறுக்க இயலாமல் மறுபடியும் போனான் முருகானந்தம். அவன் சென்ற சிறிது நேரத்துக் கெல்லாம் மங்களேசுவரி அம்மாளின் கார் அச்சகத்து வாசலில் வந்து நின்றது. பூரணியும் அந்த அம்மாளும் காரிலிருந்து கீழே இறங்கினர். அவர்கள் முகங்களில் கவலையும் பரபரப்பும் குடிகொண்டிருந்தன.

பூரணியின் தம்பியைப்பற்றி அறிந்ததனாலும் அச்சகத்தின் பின்புறம் நடந்த நிகழ்ச்சியாலும் மனம் குழம்பிப்போய் இருந்த அரவிந்தன், அவர்களைப் பார்த்து மேலும் குழப்பமடைந்தான். ஆனாலும் சமாளித்துக் கொண்டு வரவேற்றான். மங்களேசுவரி அம்மாளின் பெண்ணைப்பற்றி அரவிந்தனிடம் விவரமாகச் சொல்லி, என்ன செய்யலாம், எப்படித் தேடலாம் என்று கேட்டாள் பூரணி. அந்த நள்ளிரவில் தன்னைத் தேடிக்கொண்டு திருப்பரங்குன்றம் வந்து அந்த அம்மாள் கூறிய செய்தியைக் கேட்டபோது தன் தம்பி காணாமற்போனதும் கெட்டுத்திரிவதும் மறந்து விட்டது அவளுக்கு. வயது வந்த பெண்ணைக் காணாமல் கலங்கித் தவிக்கும் அந்த அம்மாளின் துயரம்தான் பெரிதாகத் தோன்றியது. 'என்னைப் போலவே இந்த அம்மாளும் ஆண் பிள்ளைத் துணையில்லாது குடும்பத்தைக் கட்டிக் காக்கிறவர்கள். எவ்வளவோ பணவசதியும், தைரியமும் உள்ளவர்கள்; இந்தச் சம்பவத்தினால் ஒன்றும் செய்யத் தோன்றாமல் இடிந்து போய் என்னிடம் வந்து கதறினார்கள். நான் என்ன செய்வேன்! உங்களிடம் அழைத்து வந்தேன். நீங்கள் பார்த்து ஏதாவது செய்யுங்கள்; மிகவும் நொந்து போயிருக்கிறார்கள்' என்று அரவிந்தனிடம் கூறி உதவி கோரினாள் பூரணி. 'போலீஸில் சொல்லிப் புகைப்படம் கொடுத்துத் தேடச் சொல்லலாமா? அல்லது செய்தித்தாள்களில் படத்தோடு விளம்பரம் போடலாமா?' என்று பதற்றத்தில் தோன்றிய வழிகளை எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/181&oldid=555904" இலிருந்து மீள்விக்கப்பட்டது