பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

69

பாப்பா :--ஆம் , அப்பா! அம்மா எனக்குப்பால் தருகிறாள், பழந்தருகிறாள், பாவாடை கட்டுகிறாள், பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறாள். அப்பா! நீ எனக்கு பொம்மைகள் வாங்கித் தருகிறாய். இதெல்லாம் சொல்லித்தருகிறாய்.

அப்பா :--இப்படி எல்லாம் மற்றப் பிராணிகள் செய்கின்றனவா, அம்மா?

பாப்பா :--இல்லை, அப்பா!

அப்பா :--இப்பொழுது பார்த்தாயா, அம்மா! நமக்கும் மற்றப் பிராணிகளுக்குமுள்ள வித்தியாசம்? அவைகள் எல்லாம் உணர்ச்சி வந்தவுடனே சரியா, தப்பா என்று யோசியாமல் காரியம் செய்து விடுகின்றன. நல்ல குஞ்சுகள் வேணுமே என்று யோசிப்பதில்லை. குஞ்சுகள் உண்டாகும் என்றுகூட அவைகளுக்குத் தெரியாது. அதோடு குஞ்சுகள் வந்த பிறகும் ஆண்சேவலும் பெட்டைக் கோழியும் சேர்ந்து குடும்பத்தை நடத்துவதில்லை. பெட்டைக்கோழி குஞ்சுகளைக் கூட்டித் திரிவதும், கொஞ்ச காலத்துக்குத்தான். அதுவும் உணர்ச்சியினால் தான், யோசனை செய்தல்ல,

பாப்பா :--ஆம் , அப்பா! குஞ்சுகள் கொஞ்சம் பெரிதானதும் பெட்டைக்கோழி அவைகளைக் கவனிப்பதில்லை. அவைகளும் தாயைக் தேடுவதில்லை. சேவற்கோழி முதலிலிருந்தே கவனியாமல் போய்விடுகிறது.

அப்பா :--ஆனால் மனிதர்கள் அறிவுள்ளவர்கள் அல்லவா? அவர்கள் மற்றப் பிராணிகள் மாதிரி நடப்பார்களா ?

பாப்பா :--அதெப்படி நடப்பார்கள்? அவர்கள் எதையும் யோசித்துத்தான் செய்வார்கள். அப்படித்தானே செய்ய வேண்டும் அப்பா!

அப்பா :--ஆம், அம்மா! அதனால்தான் மனிதர்களில் ஆண்களும் பெண்களும் சிறுவர் சிறுமிகளாயிருக்கும்