பக்கம்:சகல கலாவல்லி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்

நிலம் தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடியோடு

அரசன்னம் நாண.

கலைமகள் நடை ஒரு காலைக்கு ஒருகால் புதிது புதிதாக இருக்கிறது. புதிது புதிதாக நடனம் கற்றுக் கொண்டு வரும் ஆடற் பெண் ஒருத்தி ஒவ்வொரு நடனத்திலும் புதுமையைக் காட்டுவது போல, கலைமகள் நடக்கும் ஒவ்வொரு முறையும் புதிய நடையழகு தோற்றுகிறது. காலத்துக்குக் காலம் இலக்கிய நடை புதுமை பெற்று வருவது போலக் கலைமகள் நடையும் அமைகிறது. அவள் ஒவ்வொரு நடையிலும் புதிதாகக் கற்ற நடையைக் காட்டுவது போல இருக்கிறது. மேலும் மேலும் கற்றுவரும் புலவனுடைய பேச்சிலே அவனுடைய நூலறிவு புதிது புதிதாக வெளிப்படுவது போல, இந்த நடையின் அழகு வெளிப்படுகிறது.

கலைமகளின் பாதாம்புயம் பார்ப்பதற்கே அழகு நிரம்பியிருக்கும். அதன் தண்மையும் வண்ணமும் எழிலும் கண்டு தானே அதை அம்புயம் என்று சொல்கிறோம்? நீரில் உள்ள அம்புயம் பார்க்க அழகாக இருக்கிறது. ஆனால் அது நடக்காது. இந்தப் பாதாம்புயம் நடக்கிறது; ஒருகாலைக்கு ஒருகால் புதிய நடையைக் கற்றதுபோலப் புதுமையைக் காட்டுகிறது. தோற்றம் ஓர் அழகு. நடை பின்னும் அழகியது. காலுக்குப் பெருமை வடிவத்தில் மட்டும் அமைவதல்லவே ! அது நடந்தால்தானே காலாகும்?

சகல கலாவல்லியின் பாத தாமரை நடை கற்கிறதாம். அப்படி நடை கற்கும் தாயைப் பாடுகிறார் முனிவர்.

நிலம்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடியோடு

அரசன்னம் நாண நடை கற்கும் பதாம்புயத் தாயே,

சகல கலாவல்லியே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/84&oldid=1046098" இலிருந்து மீள்விக்கப்பட்டது