பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இரவு முழுவதும் மழை பெய்தது.

கூரை ஒழுகியது. தரையில் சிறிது நீர் தேங்கிநின்றது. தாத்தா மண்ணெண்ணெய் விளக்கை எரிய விட்டிருந்தார். அவர்களுக்கு வெளிச்சம் தேவையில்லை. இருப்பினும் அது பாதுகாப்பாகத் தோன்றியது.

ஆற்றின் ஒசை சதா அவர்களோடுதான் இருந்தது. ஆயினும் அதை அவர்கள் கவனிப்பதில்லை. ஆனால் அன்று இரவு அதன் ஒசையில் ஒரு மாற்றம் தெரிந்தது. ஒரு புலம்பல் போல, நெட்டை மரங்களின் உச்சியில் காற்று சரசரப்பது போல், ஏதோ ஒன்று. பாறைகளைச் சுற்றி ஒடி சிறு கற்களை அடித்துச் செல்கையில் ஒரு வேக இரைச்சல் எழுந்தது. சில சமயம் மண் சரிந்து நீருக்குள் விழுந்த போது பேரோசை கேட்டது.

சீதாவால் தூங்க முடியவில்லை.

கூரையின் சிறு வெளியின் ஊடாக விடிவின் ஒளி எட்டிப் பார்த்ததுமே, அவள் எழுந்து வெளியே போனாள். பெரும் மழை இல்லை. துாறிக் கொண்டிருந்தது. ஆனால் நாட்கணக்கில் சிணுங்கக்கூடிய தூறல் அது. மலைகளில் ஆறு தொடங்கும் இடத்தில் கனத்த மழை பெய்து கொண்டிருக்கும் என்று தோன்றியது.

சீதா தண்ணீர் ஒரத்துக்குப் போனாள். அவளுக்குப் பிரியமான பாறை தென்படவில்லை. அதன் மீது அவள் அடிக்கடி உட்கார்ந்து கால்களைத் தொங்கவிட்டு நீரை அளைந்து, நீந்திச் செல்லும் சிறு சில்வா மீன்களை வேடிக்கை பார்ப்பதுண்டு. பாறை இப்பவும் அங்கு தான் இருந்தது, சந்தேகமில்லை, ஆனால் ஆறு அதுக்கு மேல் ஒடியது.

அவள் மணலில் நின்றாள். அவளது பாதங்களுக்கு அடியில் நீர் சுரந்து குமிழியிடுவதை அவள் உணரமுடிந்தது.

சூரியன் உதயமாகும் வேளையில், தாத்தா படகை ஒட்டிச் சென்றார். பாட்டி படகின் முன் பகுதியில் படுத்திருந்தாள். அவள் சீதாவை உறுத்துப் பார்த்தாள். ஏதோ சொல்ல முயன்றாள். ஆனால் வார்த்தை வரவில்லை. கையை உயர்த்தி ஆசியளித்தாள்.

சீதா குனிந்து, பாட்டியின் பாதங்களைத் தொட்டாள். உடனே தாத்தா படகை வலித்தார். அந்தச் சிறு படகு-இரு முதியவர்களோடும் மூன்று ஆடுகளுடனும்-ஆற்றின் மேலே வேகமாக நகர்ந்து, மறுகரை நோக்கி முன்னேறியது.

நீர் மீது துள்ளிச் சென்ற அது, சிறிது சிறிதாகி, முடிவில் விசாலமான ஆற்றின் மேலே ஒரு புள்ளியெனத் தோன்றியது.

திடீரென்று சீதா தனிமையில் விடப்பட்டாள்.

காற்று வீசியது. அது மழைத்துளிகளை அவள் முகத்தில் அறைந்தது. தண்ணீர் தீவைக் கடந்து பாய்ந்து சென்றது. தூரக் கரை இருந்தது. அது

34