பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

படை சிறியதுதான். சேரர் படைக்கும் அதற்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமை இருந்தது. ஆனால் அந்தக் கடம்பர்களுக்கு இயற்கையிலே ஒரு பெரிய பலம் இருந்தது. மேல் கடல் அவர்கள் தீவுக்குப் பெரிய அரணாக இருந்தது. மதிலுக்குப் புறம்பே அகழியை வெட்டி வைத்திருப்பார்கள். கடம்பர்களுக்கு இந்தக் கடலே ஆழங்காண முடியாத அகழியாகக் கிடந்தது.

கடலைக் கடந்து கடம்பர்களின் தீவுக்குச் சென்று விட்டால், பிறகு கடுமையான போர் செய்ய வேண்டியிராது என்ற உண்மையைச் சேர மன்னன் உணர்ந்தான். தீவிலுள்ள மக்கள் யாவரும் ஆளுக்கொரு படைக்கலம் ஏந்தி எதிர்த்து நின்றாலும் சேரன் படையை வெல்ல இயலாது.

இவற்றை அறிந்த செங்குட்டுவன் கடம்பர்களை வெல்ல வேண்டுமானால், படை வீரர்களை ஏற்றிக் கொண்டு, முரட்டு அலைகளை வீசும் கடலைத் தாண்டிச் செல்வது ஒன்றுதான் அரிய செயல் என்பதைத் தெரிந்து கொண்டான். இந்தப் போர் கடம்பர்களோடு செய்யும் போராக இருந்தாலும், உண்மையில் கடலோடு செய்வதாகத்தான் இருக்கும் என்பது அவனுக்குத் தெளிவாயிற்று. அதனால்தான் அகலமும் உறுதியும் உடைய கப்பல்களைக் கட்டச் செய்தான். கப்பல்களைக் கட்டி வைத்துக் கொண்டால், கடம்பரை வெல்வதற்கு மட்டுமா அவை பயன்படும்? வேற்று நாட்டுக்குச் சென்று வாணிகம் செய்யவும் அவை உதவும் அல்லவா?

கப்பல்களைக் கட்டி விட்டார்கள். படைகளை ஏற்றிக் கடம்பர் இருந்த தீவுக்குச் சென்று மன்னன் போர்