பக்கம்:செவ்வானம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவ்வானம் அத்தியாயம் 1 இன்னும் விடியவில்லை. விடிவதற்கு எவ்வளவோ நேரமிருந்தது. அப்பொழுது, இரவிலே இரண்டரை மணி. அந்த அறையிலே ஒளியில்லை. ஒளி புகுத்த முனைந்து கொண்டிருந்த விளக்கிலே உயிரில்லை. உயிரூட்டும் ஜீவசத்தான எண்ணெயில்லை. 'அரிக்கன் லாம்பு அது. அதைச் சுற்றிப் படர்ந்திருந்த ஒளி வட்டத்தின் வியாபகம் குறுகிக்கொண்டே வந்தது. இருட்டு ஒளியை விரட்டிக் கொண்டிருந்தது. வெற்றிகரமாக வாபஸ் வாங்கும் நவயுகப் படைவீரர்போல் ஒளி விளக்கினுள் அடைக்கலம் புகுந்து, சிம்னிக்குள் ஒடுங்கி, திரியினுள்ளேயே குவிந்துவிட்டது. சாவை எதிர்த்துப் புரட்சி செய்வதுபோல 'டுபுக் 'டுபுக் என்று குதித்தது. உணர்வுடன் தலை தூக்க முயலும் தொழிலாளி வர்க்கத்தைப் பட்டினி போட்டே வலுவிழந்து போகும்படி செய்ய விரும்பும் முதலாளித் தனம் மாதிரி, பேயிருள் ஒளியைத் தன் பெருவயிற்றுள் ஐக்கிய மாக்கிக் கொண்டது. எங்கும் இருட்டு, வெளியுலகிலும் இருட்டேதான். ஒளிக்கும் இருளுக்கும் நிகழ்ந்த போராட்டத்தைக் கவனித்தபடி நாற்காலியிலே விழுந்துகிடந்த தாமோதரன் நெடுமூச்செறிந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/9&oldid=841458" இலிருந்து மீள்விக்கப்பட்டது