பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தெளியவுணர்ந்திருந்தார்கள். தமிழ்ப் பொருளிலக்கணம் கூறும் முதல் கரு உரி என்னும் மூவகைப் பொருள்களில் கருப்பொருளை வகைப்படுத்துணர்த்தக்கருதிய ஆசிரியர் தொல்காப்பியனார், "தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதியொடு தொகைஇ, அவ்வகை பிறவும் கருஎன மொழிப” எனத் தெய்வத்தினை உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத உணவினும் முதன்மையுடையதாகத் தமிழ் முன்னோர் எண்ணிய திறத்தினை நன்கு புலப்படுத்தியுள்ளமை காணலாம்.

ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக மன்னுயிர்கள் பல்வேறுடம்புகளைப் பெற்றுப் படிப்படியாக வளர்ச்சி நிலை யெய்திய தொன்மைக்காலத்தே வாழ்ந்த மக்கட் கூட்டத்தார் கடல்கோள் புயல் நிலநடுக்கம் முதலாக இயற்கைப் பொருள்களால் நேரும் இடையூறுகளையும் புலி முதலிய கொடிய விலங்கினங்களாலும் பாம்பு முதலிய நச்சுயிர்களாலும் நேரும் இடர்களையும் எண்ணிப் பெரிதும் அஞ்சினர். இவ்விடையூறுகளைப் போக்குதற்குத் தம்பால் அன்புடைய ஆற்றலுடையார் யாரேனும் துணை செய்யமாட்டார்களா எனத் தம்மினும் மேலானதொரு பொருளின் துணையை நாடினர். இவ்வாறு மக்கள் உள்ளத்தே தோன்றிய அச்சத்தினாலும் உயிர்ப் பண்பாகிய அன்பினாலும் எல்லாவுயிர்கட்கும் துணைபுரியும் தெய்வம் என்பது ஒன்றுண்டு என்னும் உணர்வு மனவுணர்வினராகிய மக்களது மனத்தகத்தே அரும்பித் தோன்றியது. மக்களுள்ளத்தே கிளர்ந்தெழுந்த இத்தெய்வவுணர்வு, ஞாயிறும் திங்களும் விண்மீன்களும் சுடர் விட்டு விளங்குதற்கு இடமாகிய வானையும் கடல்சூழ்ந்த இவ்வுலகினையும் நிலமெங்கும் பரவி வாழும் எண்ணிறந்த உயிரினங்களையும் இயைத்து நோக்கும் பல்வேறு நம்பிக்கைகட்கும் நிலைக்களமாய் வளர்ந்தது; மக்கள் பெற்றுள்ள வாழ்வியலில் அழுந்தியறிதலாகிய அனுபவ அறிவின் பயனாகக் கிடைத்த உயர்ந்த தத்துவங்களோடு கூடிய பல்வேறு சமயங்களாக உலகெங்கும் விரிந்து


1. தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்தினையியல், 13.