பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

255


களும் விரும்பி விளையாடுதற்கு உரிய சிறப்புடைய திருத் தலங்களே என்னும் கருத்தினால்

“குன்று தோறாடலும் நின்றதன் பண்டே'

என்றார் முருகாற்றுப்படை ஆசிரியர். மலைகள் தோறும் சென்று விளையாடுதலும் முருகப் பெருமானுக்கு நிலை பெற்ற பண்பாம் என்பது இத்தொடரின் பொருளாகும். இவ்வாறு குறிஞ்சிக் கிழவன் என்ற பொருள்படப் பழமுதிர் சோலை மலை கிழவோன் என முருக வேளை இந்நூலாசிரியர் திருமுருகாற்றுப்படையின் இறுதி அடியில் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார். இங்குக் கூறப்பட்ட பழமுதிர் சோலைமலை என்பதனைச் சங்கத் தொகை நூலாகிய பரிபாடலில் திருமாலிருஞ்சோலைமலை என்ற பெயரால் போற்றப்பெறும் அழகர்மலையென வழங்கும் திருப்பதியாகக் கொள்வது முண்டு. பழமுதிர் சோலைமலை என அதனைத் தனியே எண்ணாமல் அம்மலை முருகனுக்கு உரியது என்றவளவில் பழமுதிர் சோலை மலைகிழவோன் எனத் திருமுருகாற்றுப்படை குறித்தலால் பழமுதிர் சோலைமலை என்ற தொடர் திருமாலிருஞ்சோலை மலையை மட்டும் குறித்தது எனக் கொள்ளாமல், அம்மலையினை ஒத்து இழுமென இழிதரும் அருவியையுடைய வளமார்ந்த எல்லா மலைகளையும் குறித்து நின்றதெனக் கொள்ளுதலே ஏற்புடையதாகும். பழமுதிர் சோலை மலைகிழவோன் என உடம்பொடு புணர்த்துக் கூறினமையால், பழமுதிர் சோலை மலையின்கண்ணே எழுந்தருளியிருத்தலும் உரியன் எனப் பெருள் கொண்டு இம்மலையினை முருகனுக்குரிய தனித் திருப்பதியாகக் கொண்டாலும் இம்முருகாற்றுப்படையில் சிறப்பிக்கப் பெற்ற திருத்தலங்கள் ஐந்தெனக் கொள்வதன்றி ஆறுபடை வீடெனக் கொள்வதற்குச் சிறிதும் இடமில்லை.

திருமுருகாற்றுப்படை என்னும் இப்பனுவலின் ஆசிரியர் சங்கப்புலவர் நக்கீரனார் ஆவார். இச்செய்தி, “குமரவேளை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய திருமுருகாற்றுப்படைக்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த வுரை” எனவரும்