பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


நாடுகளிலும் நிலவி வரும் தொன்மை வழிபாட்டு முறைகளால் நன்கு துணியப்படும். மன்னுயிர்களுக்கு ஆக்கமும், அழிவும் நல்கும் ஆற்றல் வாய்ந்த ஞாயிறு திங்கள் தீ வளி மழை முதலிய இயற்கைப் பொருள்களையே தெய்வமெனக் கொண்டு வழிபட்ட பண்டைக்கால மக்கள், உலக இயக்கத்தினைக் கூர்ந்துணரும் அறிவும் இயற்கைப் பொருள்களால் அவ்வப் பொழுது நேரும் இடர்களிலிருந்து தப்புதற்குரிய ஆற்றலும் தம்முள்ளத்துக் கிளர்ந்தெழுந்த நிலையில் இப்பொருள்களெல்லாவற்றையும் தன்னகத்தடக்கியுள்ள அண்டத்தொகுதியினையும் உலகப்பரப்பில் வாழும் மன்னுயிர்த் தொகுதியினையும் இயக்கி நிற்பதொரு முழு முதற்பொருளாகிய தெய்வம் ஒன்றுண்டு எண்ணுத் தெளிவினைப் பெறுவாராயினர். இந்நிலையில் முன்னர் வழிபடப்பெற்ற ஞாயிறு திங்கள் தீ முதலிய இயற்கைப் பொருள்களனைத்தும் உலகுயிர்கள் எல்லாவற்றையும் உயிர்க்குயிராய் உள்நின்றியக்கும் பெருந்தெய்வத்தின் பேருருவத்தின் அங்கங்களாகக் கொண்டனர். ஞாயிறு திங்கள் தீ என்னும் முச்சுடர்களும் இறைவனுடைய கண்களாகவும் பல்லுயிர்களும் தங்கி வாழ்தற்கு ஆதாரமாகிய பெருநிலம் சேவடியாகவும் பரந்திடங்கொடுக்கும் விசும்பு மெய்யாகவும் கடலே உடையாகவும் அமைய இவ்வாறு எல்லாம் வல்ல இறைவன் உலகமேயுருவமாகக் கொண்டு திகழ்கின்றான் எனத்தெளிந்து அம்முதல்வனது பேருருவ அமைப்பினைத் தம் உள்ளத்துட்கொண்டு வழிபடுவாராயினர். இத்தகைய பெருந்தெய்வத்தின் பேருருவ வழிபாட்டினை விளக்கும் நிலையில் அமைந்தது,

“மாநிலஞ் சேவடியாகத் தூநீர்

வளைநரல் பெளவம் உடுக்கை யாக

விசும்பு மெய்யாகத் திசைகை யாக

இயன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய

வேத முதல்வ னென்ப

தீதற விளங்கிய திகிரி யோனே'

எனவரும் நற்றிணைக் கடவுள் வாழ்த்துப் பாடலாகும்.

24. நற்றிணை, கடவுள் வாழ்த்து.