பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


யுடைய பெருமானே! நின் தன்மையெல்லாம் முழுதும் அளந்தறிதல் நிலைபெற்ற எவ்வுயிர்க்கும் அரிதாகையினாலே நின் திருவடியைப் பெறவேண்டுமென்று நினைந்து வந்தேன்” என அவ்விறைவனை நோக்கி நினது வேட்கையினைத் தெரிவிப்பாயாக. நீ அங்ங்னம் தெரிவித்தற்கு முன்னரே முருகனைச் சேவித்து நிற்போராகிய மெய்யடியார்கள், அங்கே பொலிவுடன் வந்து தோன்றி அவ்விறைவனை நோக்கிப் பெருமானே, அறிவு முதிர்ந்த வாய்மையுடைய இப்புலவன் நினது பொருள்சேர் புகழுரையினைக் கூற விரும்பிக் கேட்டோர்க்கு இனியனவும் உறுதி பயப்பனவுமாக மிக்க பலவற்றை வாழ்த்தி வந்துள்ளான். இவன் நின்னால் அளிக்கத் தக்கவன்’ என நின் பொருட்டுக் குறையிரந்து நிற்பர். அந்நிலையில் இழுமென இழிதரும் அருவிநீரையும், பழம் முதிர்ந்த சோலைகளையும் உடைய மலைக்கு உரியவனாகிய முருகப்பெருமான் தெய்வத்தன்மை அமைந்த பேராற்றல் விளங்கும் வடிவினையும், வானளவோங்கிய வளர்ச்சியையுமுடையனாக அவ்விடத்தே வந்து தோன்றித் தனது பேருருவம் மக்கள் கண்களால் காண்டற்கரியதாதலின் அப்பெரிய வடிவத்தை உள்ளடக்கிக் கொண்டு தனது பழைய வடிவாகிய இளமைக் கோலத்தினை நினக்குக் காட்டி “நீ வீடுபெற நினைந்துவந்த வருகையை யான் முன்னரே அறிவேன். அது நினக்கு எய்துதற்கரியதென்று அஞ்சுதலைத் தவிர்க” என்று நின்பால் அன்புடைய நல்ல வார்த்தைகளைப் பலமுறையும் அருளிச் செய்து கடல் சூழ்ந்த இவ்வுலகிலே நீ ஒருவனுமே பிறர்க்கு வீடளித்தற்கு உரிமையுடையையாய்க் கேடின்றித் தோன்றும்படி பிறராற் பெறுதற்கரிய சிறப்பாகிய வீடுபேற்றின்பத்தை நினக்குத் தந்தருளுவான் என்பது இத் திருமுருகாற்றுப்படையின் திரண்ட பொருளாகும்.

எல்லாப் பொருளினும் சிறந்ததாகிய வீடுபேற்றினை 'விழுமிய பெறலரும் பரிசில் என நக்கீரனார் இத்திருமுரு காற்றுப்படையிற் சிறப்பித்துள்ளார். விழுமிய பரிசில், பெறலரும் பரிசில் என இயையும். வீடுபேற்றினும் சிறந்தது பிறிதொன்றின்மையின் அதனை விழுமிய பரிசில் என்றும், அவ்வீடு பேறுதானும் இறைவனது திருவருளாற் கிடைக்கப் பெறுவதன்றி உயிர்கள் தாமே தமது முயற்சியாற்