பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்

41


சேயோன் சிவன் என வழங்கும் பெயரொற்றுமையாலும் இனிது புலனாகின்றது. முருகனுக்குரிய சேயோன் என்னும் பெயர் செம்மை நிறம் வாய்ந்த திருமேனியையுடையான் என்னும் பொருளது. சிவன் என்னும் பெயரும் சிவந்த நிறத்தினன் என்னும் பொருளையே தருகின்றது. எனவே சொல்லொற்றுமையாலும் பொருளொற்றுமையாலும் சேயோனாகிய முருகனும் சிவனாகிய இறைவனும் ஒரே முழுமுதற் கடவுளாகக் கருதப்பெற்றமை காணலாம். குமரனாகிய முருகனும் அவன் தந்தையாகிய சிவனும் முழுமுதற் கடவுளின் இருவேறு கோலங்களே என்னும் மெய்ம்மையினைப் புலப்படுத்தும் முறையில் அமைந்ததே கந்தபுராண வரலாறாகும். முருகப் பெருமானைக் குறித்து வழங்கும் திருப்பெயர்களுள் ‘கந்தன்” என்பதனைத் தமிழ்ச் சொல்லாகக் கொண்டு கந்தன் - துண்வடிவில் நிறுத்தப் பட்ட கந்தில் உறையும் தெய்வம் எனப் பொருள் கொள்ளுதற்கும் இடமுண்டு. “வல்வேற் கந்தன் நல்லிசை யுள்ளி” என வரும் தொடரைக் கூர்ந்து நோக்குங்கால் ‘கந்தன்” என்பது சங்க காலத்திலேயே தெய்வப் பெயராக மக்களுக்கு இட்டு வழங்கப் பெற்ற தென்பது நன்கு உய்த்துணரப்படும்.

குறிஞ்சி நிலத் தெய்வமாகிய சேயோனை நிலங்கடந்த நிலையில் முழுமுதற் கடவுளாகப் போற்றப்பெறும் சிவபெருமானுடைய திருமகனாகக் கொண்டு வழிபடும் நிலையேற்பட்டபின் சிவபெருமான் திருக்கோயிலின் அகத்தும் புறத்தும் முருகப் பெருமானது திருவுருவம் இடம்பெறுவதாயிற்று. இவ்வாறே முருகப் பெருமான் திருக்கோயில்களிலும் அம்முதல்வனது தந்தை என்ற முறையில் சிவலிங்கத் திருவுருவமும் தாய் என்ற முறையில் கொற்றவை திருவுருவமும் தாய்மாமன் என்ற முறையில் திருமால் திருவுருவமும் இடம் பெறுவனவாயின. திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாயாகிய திருச்செந்தில், திருவாவினன்குடி, திருவேரகம், திருச்செங்கோடு முதலிய குன்றுகள் சங்க காலத்தில் முருகப் பெருமானுக்குரிய சிறப்புடைய திருக்கோயில்களாக வழிப்டப்பெறும் தொன்மையுடையனவாகத் திகழ்கின்றன.