பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


கொடுகொட்டி ஆடல் சிவபெருமானால் ஆடப்பெற்ற கூத்தாகும். இது, தேவர் தமக்குத் துன்பம் விளைக்கும் திரிபுரத்தவுனர்களை யழிக்கும்படி வேண்டத் தேவர் யாவரினுமுயர்ந்த இறைவனாகிய சிவபெருமான் வடவைத் தியைத் தலையிலேயுடைய பெரிய அம்பு ஏவல் கேட்ட அளவிலே திரிபுரத்தவுனர் வெந்து நீறாக விழுந்த வெண்ணிற்றுக் குவியலிலே பைரவிக்குரிய சுடுகாடாகிய அரங்கத்திலே உமாதேவி ஒருபக்கத்தில் நின்று பாணி, தூக்கு, சீர் என்னுந் தாளவகைகளைச் செலுத்த வெற்றிக்களிப்பால் கைகொட்டி நின்று ஆடிய கூத்தாகும். திரிபுரந் தீப்பற்றி எரியக்கண்டும் இரங்காது கை கொட்டி நின்று ஆடிய கொடுமையுடையதாதல் பற்றி இது கொடு கொட்டி எனப் பெயர் பெற்றது. இதனியல்பினை

பாரதியாடிய பாரதி யரங்கத்துத் திரிபுரமெரியத் தேவர் வேண்ட எரிமுகப் பேரம் பேவல் கேட்ப உமையவள் ஒருதிற னாக ஓங்கிய இமையவன் ஆடிய கொடுகொட்டியாடல்

என விரித்துரைப்பர் அடிகள். திரிபுரத்தை யழித்தற் பொருட்டு வானோராகிய தேரில் நால்வேதமாகிய குதிரைகளைப் பூட்டிக் கூர்முள் பிடித்துச் சாரதியாயிருந்து ஒட்டிய நான்முகன் காணும்படி பாரதி வடிவாகிய இறைவன் வெண்னிற்றை யணிந்தாடிய கூத்து பாண்டரங்கம் எனப்படும். இதனியல்பினை,

தேர்முன் நின்ற திசைமுகன் காணப் பாரதியாடிய வியன்பாண் டரங்கம்

என விளக்குவர் அடிகள்.

இங்கு எடுத்துக்காட்டிய பகுதிகளால் சிவபெருமா னாகிய இறைவன் என்றும் பிறவா யாக்கை யாகிய அருள் திருமேனியுடையான் என்றும், தேவர் போற்றத் திங்கள் சூடிய செல்வன் என்றும், யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான் ஆதலின் பெரியோன் என்னும் திருப்பெய